Published : 19 Nov 2019 05:16 PM
Last Updated : 19 Nov 2019 05:16 PM

டிஜிபி பிரதீப் வி.பிலிப்புக்கு 2 ‘ஸ்கோச்’ விருதுகள்

டிஜிபி பிரதீப் வி. பிலிப் 2 ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். காவல் துறை நண்பர்கள் இயக்கம், உங்கள் குற்றவாளிகளைத் தெரிந்து கொள்ளுங்கள் திட்டங்களுக்காக இந்த விருதுகள் கிடைத்துள்ளன.

மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் சிறப்பு ஜூரிக்கள் மற்றும் வாக்கெடுப்பு முறை மூலம் தேர்வு செய்யப்படும் ‘ஸ்கோச்’ விருதுகள் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அரசின் துறைகளில் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுகிறது.

சென்னை காவல்துறையில் காவல் நண்பர்கள் (Friends of police) என்கிற முறை கொண்டுவரப்பட்டது. இளம் தலைமுறையினர், குடிசைப் பகுதியில் உள்ள இளைஞர்கள் காவல்துறையினருடன் நட்பாக இருக்கும் வகையிலும், ஒன்றாக இருந்து செயல்படும் வகையிலும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பொதுமக்கள் வரவேற்பைப் பெற்ற இந்த அமைப்பினால் இளம் தலைமுறையினர் போலீஸைப் பற்றி அறிந்துகொள்ளவும், நட்பாகப் பழகவும், சிறந்த குடிமகனாக வளரவும் வாய்ப்பு கிடைத்தது.

குடிசைப் பகுதிகளில் இவ்வமைப்பில் இளைஞர்கள் இணைந்ததால் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டனர். இளம் வயதில் குற்றச் செயல்களுக்குள் தள்ளப்படுவது குறைந்தது. குற்றவாளிகள் குறித்த பல தகவல்களும் போலீஸாருக்குக் கிடைத்தன. இதை அறிமுகப்படுத்தியவர் தற்போது தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை டிஜிபியாக இருக்கும் பிரதீப் வி.பிலிப் ஆவார்.

டிஜிபி பிரதீப் வி.பிலிப் இரண்டு பிரிவுகளின் கீழ் ஸ்கோச் தகுதி விருதுகள் பெறுகிறார். இந்த விருது சாதனையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைக் கவுரவிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளையும் ஊக்குவிக்கிறது. இந்த விருது நியமனம், நடுவர் மன்ற விளக்கக்காட்சி மதிப்பீடு அதைத் தொடர்ந்து இணையவழி வாக்களிப்பு போன்ற கடுமையான செய்முறை விளக்கத்திற்குப் பிறகு வழங்கப்படுகிறது.

டிஜிபி பிரதீப் வி.பிலிப், காவல் துறை நண்பர்கள் அமைப்பை ஏற்படுத்தியதற்காகவும், சிறந்த காவல் விருதுக்காக உங்கள் குற்றவாளியை தெரிந்துகொள்ளுங்கள் என்ற 2 பிரிவுகளின் கீழ் தனது அறிக்கையை சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பித்தார் .

‘காவல் துறை நண்பர்கள் இயக்கம்’ 1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு 94-ம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. அந்த இயக்கம் இன்று தேசிய மற்றும் உலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அதன் முக்கிய நோக்கம் காவல் படையை, மக்கள் மயமாக்குதல் மற்றும் சமுதாய மயமாக்குதல் ஆகும்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ‘உங்கள் குற்றவாளியைத் தெரிந்து கொள்ளுங்கள்’ கருத்தாக்கம் ‘காவல்துறை நண்பர்கள்’, ‘பொது விநியோகத் திட்டம்’ தொடர்புடைய நபர்களின் உதவி மற்றும் சமூக வலைப்பின்னல் பகுப்பாய்வு மற்றும் புள்ளிவிவரங்கள் வாயிலாக 80 சதவீத அரிசி கடத்தல் குற்றத்தில் ஈடுபடும் 20 சதவீத தீவிரக் குற்றவாளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து அவர்களைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.

காவல் துறை நண்பர்கள் இயக்கம் மற்றும் உங்கள் குற்றவாளிகளைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற இரண்டு திட்டங்களும் நாடு முழுவதும் உள்ள அனைத்துத் துறை நிர்வாகம் சார்ந்த 1000 நியமனங்களிலிருந்து ‘ஸ்கோச் தகுதி விருதுக்கு’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. விருதுகள் நவம்பர் மாதம் 29 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் வழங்கப்பட உள்ளது.

இந்த நேரத்தில் டிஜிபி பிரதீப் வி.பிலிப் இதற்கு ஆதரவு மற்றும் ஊக்கத்தை அளித்த தமிழக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே சிசிடிவி கேமரா நிறுவியதற்காக சென்னை காவல்துறையும், இ-சலான் மூலம் பணமில்லாப் பரிவர்த்தனை முறையை அமல்படுத்தியதற்காக சென்னை போக்குவரத்துக் காவல்துறையும் கடந்த முறை ஸ்கோச் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x