கை, கால் வெட்டப்பட்டதாக புகார் கூறிய இளைஞர் கைது: பேருந்தில் மாணவியிடம் தகராறு செய்ததால் போலீஸார் நடவடிக்கை

கை, கால் வெட்டப்பட்டதாக புகார் கூறிய இளைஞர் கைது: பேருந்தில் மாணவியிடம் தகராறு செய்ததால் போலீஸார் நடவடிக்கை
Updated on
1 min read

விழுப்புரத்தில் மாணவியை காதலித்ததற்காக தன் கை, கால் வெட்டப்பட்டதாக புகார் கூறிய இளைஞர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(35). இவர் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துநராக பணிபுரிந்து வந்தார். அப்போது மாணவி ஒருவரை செந்தில் காதலித்ததாக கூறப்படுகிறது. அவர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் மாணவியின் உறவினர்கள் தனது கை, கால்களை வெட்டிவிட்டதாக எஸ்பி அலுவலகத்தில் கடந்த மாதம் செந்தில் புகார் தெரிவித்தார்.

இதனால் இவருக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து விழுப்புரம் போலீஸார் செந்தில் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். அப்போது ரயில் விபத்தில் செந்தில் கை, கால்களை இழந்தது தெரியவந்தது. இதுதொடர்பான மருத்துவ சான்றிதழையும் அவர்கள் வழங்கினர். இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் செந்தில் தான் ஏற்கெனவே பணிபுரிந்த தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் காதலித்ததாக கூறப்படும் மாணவியும் அந்தப் பேருந்தில் பயணம் செய்ததாகவும், அவரிடம் செந்தில் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார் நேற்று முன்தினம் இரவு செந்திலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in