

முன்னாள் ராணுவ வீரர்கள் மறைந்தால் அவர்களுக்கு இனி அரசு மரியாதை செலுத்தப்படும் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை நிர்வாகக் கூட்டம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் இன்று (நவ.19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமியும், துறை அமைச்சர் கமலக்கண்ணனும் கூறுகையில், "முன்னாள் ராணுவ வீரர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கான உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளிப் பரிசு ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூப்பனாகவும், அடுத்த ஆண்டு முதல் வங்கிக் கணக்கில் நேரடியாகவும் செலுத்தப்படும். கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 23 சலுகைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ராணுவ வீரர்கள் மறைந்தால் அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும். போலீஸ் அதிகாரிகள் அவர்களின் வீட்டுக்குச் சென்று மரியாதை செலுத்துவார்கள். இதன் மூலம் அவர்களது சேவை அங்கீகரிக்கப்படும். இதற்கான வழிமுறைகள் வடிவமைக்கப்பட்டு அரசாணை வெளியான பிறகு நடைமுறைக்கு வரும்" எனத் தெரிவித்தனர்.