Published : 19 Nov 2019 03:34 PM
Last Updated : 19 Nov 2019 03:34 PM

எங்கள் மீது கல்லெடுத்து அடித்தால் அவர்களுக்குத்தான் காயம்; ரஜினி- கமல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

எங்கள் மீது கல்லெடுத்து அடித்தால் அவர்களுக்குத்தான் காயம் ஏற்படும் என, ரஜினி, கமல் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை, தியாகராய நகரில் இன்று (நவ.19) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ரஜினியை 'நமது அம்மா' நாளிதழில் விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் யாராக இருந்தாலும் அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதில் தவறில்லை. அவர்கள் தங்கள் கொள்கைகளைச் சொல்லலாம். மக்கள் பாராட்டும் அரசாக தமிழக அரசு உள்ளது. எங்கள் மீது கல்லெடுத்து அடித்தால் அவர்களுக்குத்தான் காயம் ஏற்படும். அவர்களுக்குக் காயம் ஏற்படாது. அதற்கான தகுந்த பதிலடியை வாங்கிக்கொள்கின்றனர். அவர்கள் அமைதியாக இருந்தால் நாங்களும் அமைதியாக இருப்போம்.

எங்கள் கட்சி, ஆட்சி மீது வீண் விமர்சனங்களை வைக்கும்போது, நாங்கள் அம்மாதிரியான விமர்சனங்களை வைப்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பந்து அவர்களின் கையில்தான் உள்ளது. எங்கள் மீது பந்தை வீசினால், மீண்டும் நாங்கள் அவர்கள் மீது வீசுவோம். கட்சி, ஆட்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பல கட்சிகளிலிருந்து இடைஞ்சல்கள் கொடுத்தாலும் அதனைத் தாண்டி வந்துள்ளோம். ஏளனங்கள், கேலிகள், கண்டனங்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை.

ஜெயலலிதா இல்லாமல் இந்த ஆட்சி நீடிக்குமா என்றனர். ஆனால், ஆட்சி நீடித்து அதிசயம் நடந்தது. மறுபடியும், 2021-ல் அதிமுக ஆட்சி வருமா என்றால் அந்த அதிசயமும் நடக்கும். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக தொகுதிகளை அதிமுக கைப்பற்றி அதிசயம் நடக்கும். அவர்கள் சொல்வது போன்று வேறு எந்த அதிசயமும் தமிழகத்தில் நடக்காது. அதிசயம், அதிர்ஷ்டத்தில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. உழைப்பு தான் எங்களின் தாரகம் மந்திரம்," என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள் என, ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "இலங்கை தமிழர்களை அதிமுக உளப்பூர்வமாக நேசிக்கிறது. மற்றவர்கள் தங்கள் சுய லாபத்துக்காக, நம்மை அழித்தவர்களோடு கைகோத்தார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். திமுக அப்போது நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம். 2 லட்சம் பேர் வீணாக இனப்படுகொலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். அன்றைக்கு யாரெல்லாம் மகிந்த ராஜபக்சவிடம் பரிசு வாங்கினர்? திமுக இதில் இரட்டை வேடம் போடுகிறது," என குற்றம் சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x