அரசு இடத்தில் கருணாநிதி சிலை வைக்க முடியாது என கிரண்பேடி வாதம்: உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என நாராயணசாமி தகவல்

அரசு இடத்தில் கருணாநிதி சிலை வைக்க முடியாது என கிரண்பேடி வாதம்: உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என நாராயணசாமி தகவல்
Updated on
1 min read

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை அரசு இடத்தில் வைக்க முடியாது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதிக்கு புதுவையில் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். கருணாநிதிக்கு சிலை அமைக்க முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்எல்ஏக்கள், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, "அரசு இடத்தில் கருணாநிதியின் சிலையை வைக்க அனுமதி கிடையாது. கடந்த 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பொது இடங்களில் சிலை அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை அரசு தலைமைச் செயலர் கடைப்பிடிக்க வேண்டும். இதுதொடர்பாக புகார் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தத் தீர்ப்பை புதுவை மாநில தலைமைச் செயலாளர் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். தனியார் இடத்தில் மட்டுமே சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் நாராயணாசாமியிடம் கேட்டதற்கு, "உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளதால் அனுமதி கோரி முடிவு எடுப்போம். தீர்ப்புக்குப் பிறகு புதுச்சேரியில் சிலை வைக்கவில்லை. அதனால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in