

மதுரை மாநகராட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட மாநகர் பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதியின் மகள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் அதிமுக, திமுக.வினர் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் திமுக மாநகர், புறநகரில் வடக்கு, தெற்கு என 3 மாவட்டங்களாகச் செயல்படுகின்றன. புறநகரில் 30 வார்டுகளும், மாநகரில் 70 வார்டுகளும் இடம் பெற்றுள்ளன. புறநகர், மாநகர் நிர்வாகிகளிடையே இணைந்து செயல்படுவதில் சரி யான ஒத்துழைப்பு இல்லை. மாநகரில் மாவட்டச் செயலாளர் கூட நியமிக்கப்படாமல், பொறுப்புக் குழுதான் நிர்வாகத்தை நடத்து கிறது. தலைவராக முன்னாள் எம்எல்ஏ. கோ.தளபதி உள்ளார்.
இந்நிலையில் மேயர் வேட் பாளராக யாரை நிறுத்துவது என மாநகர் நிர்வாகிகளிடையே தீவிர ஆலோசனை நடந்தது. பொறுப்புக்குழு உறுப்பினர் சி.சின்னம்மாள், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் ஆகியோர் விருப்ப மனுக்கள் அளித்திருந்தனர். மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானதால், நிர்வாகி கள் பலரும் அமைதி காத்து வரு கின்றனர். புறநகரில் நாகனாகுளம் முன்னாள் கவுன்சிலர் சசிக்குமார் மனைவி வாசுகி, மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தியிடம் விருப்ப மனுவைத் தாக்கல் செய்தார். மூர்த்தி ஆதரவுடன் திமுக தலைமையிடம் பேசி உறுதியாக சீட் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை வாசுகி தரப்புக்கு உள்ளது. மாநகரில் நல்ல போட்டியை அளிக்கும் யாரும் மனுத் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்ற நிலையில் வாசுகிக்கு வாய்ப்பு பிரகாசம் எனக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று யாரும் எதிர்பாராத வகையில், முன்னாள் எம்எல்ஏ. கோ.தளபதியின் மகள் மேகலா விருப்ப மனு அளித்தார். அப்போது பொறுப் புக்குழு உறுப்பினர்கள் பெ.குழந்தைவேலு, முன்னாள் எம்எல்ஏ. வி.வேலுச்சாமி, பொன்.சேது உட்பட பலர் உடனிருந்தனர். மேகலா தேர்தல் களத்துக்கு வருவார் என திமுக.வினரே எதிர்பார்க்கவில்லை. மேகலாவின் திடீர் வருகை மாவட்டத்தின் மொத்த நிர்வாகிகளிடையே புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர் திமுக நிர்வாகிகளின் இந்த முடிவை அதிமுக.வினரும் உன் னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
நிர்வாகிகள் சிலர் கூறுகையில், மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தளபதியின் மகள் மனு அளித்துள்ளார். மூர்த்திக்கும், மாநகர் நிர்வாகிகள் சிலருக்கும் கட்சி ரீதியாக கருத்து வேறுபாடு உள்ளது. மேயர் பதவி மாநகருக்குக் கட்டுப்பட்டது. இதில் புறநகரிலுள்ள மூர்த்தி செல்வாக்கைக் காட்டுவதை மாநகர் நிர்வாகிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் கவுரவ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மற்ற வேட்பாளர்கள் என்றால் மூர்த்தி நிறுத்தும் வேட்பாளரை கட்சித் தலைமை எளிதாக ஏற்றுக் கொள்ளும். இதையடுத்தே, தள பதி குடும்பத்திலிருந்தே ஒரு வரை போட்டியிட வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதை தளபதி ஏற்றுக்கொண்டதே பெரிய விசயம். மேகலாவா, வாசுகியா என்பதை கட்சித் தலைமையே முடிவு செய்யட்டும், என்றுகூறினர்.
இது குறித்து பி.மூர்த்தி கூறுகையில், தகுதியான வேட்பாளரை நிறுத்தி மேயர் பதவியை திமுக கைப்பற்ற வேண்டும் என்பதே முக்கியம். கட்சித் தலைமை யாருக்கு வாய்ப்பு அளிக்கிறதோ அவரது வெற்றிக்குப் பணியாற்றுவோம், என்றார்.
- எஸ்.ஸ்ரீனிவாசகன்