Published : 19 Nov 2019 01:58 PM
Last Updated : 19 Nov 2019 01:58 PM

பண்ருட்டி அருகே சிறுவத்தூரில் பள்ளி வளாகத்தில் கோயில்: மாணவர்களுக்கு இடையூறு

பண்ருட்டி அருகே சிறுவத்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கோயில்.

பண்ருட்டியை அடுத்த சிறுவத் தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 150 மாணவர்கள் பயில்கின்றனர். தலைமையாசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

கடந்த 1925-ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி, 30 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 95 ஆண்டுளாக இக்கிராமத்தில் இப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த நிலையில், இப்பள்ளி வளாகத்தினுள் பள்ளி வகுப்பறைக் கட்டிடங்களுக்கு நடுவே ஒரு பெருமாள் கோயிலும், அம்மன் கோயிலும் கட்டப்பட்டது. காலப் போக்கில் இது இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயிலாக மாறியது.

இக்கோயிலில் பொதுமக்கள் நாள்தோறும் தரிசனம் செய்து வருவதால் பள்ளி வளாகத்தின் வாயில் கதவை பூட்ட முடியாத சூழல் உள்ளது. ஆடி மாதத்தின் போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களிலும், மார்கழி மாதத்தை உள்ளடக்கிய டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

மேற்கண்ட 4 மாதங்களிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்து வதில் இடையூறு இருப்பதாக ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோயிலில் சிறுசிறு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதோடு, பெருமாள் கோயிலிலும் முன் மண்டபம் அமைப்பதற்கான பணி துவக்கப்பட்டு, அது பாதியிலேயே கைவிடப்பட்டது. மண்டப தூண் அமைப்பதற்காக போடப்பட்ட கட்டுமான கம்பிகள் சிதைந்த நிலையில் நீண்டு கொண்டிருக்கின்றன. இதனால் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பள்ளித் தலைமையாசிரியை உமாவிடம் கேட்டபோது, "பள்ளி துவங்கிய காலம் முதலே பெருமாள் கோயில் இருந்ததாகத் தெரிவிக்கின்றனர். அம்மன் கோயில் கட்டி 25 ஆண்டுகள் இருக்கலாம். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்மன் கோயில் முன் மண்டப பணிகள் துவங்கய போது, கட்ட வேண்டாம் என்றோம். அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, பூசாரி மூலம் குறி கேட்டு, மண்டம் கட்டியே ஆகவேண்டும் என்று தீர்மானித்தனர். அதற்கு மேல் நாங்கள் எதையும் கூற முடியவில்லை. இப்பள்ளியில் பயில்பவர்களுக்கு அது பழகிவிட்டதால், அதை பொருட்டாக கருதவில்லை'' என்றார். தவிர பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினரும் இதுவரை எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என்றும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பண்ருட்டி வட்ட கல்வி அதிகாரி ராஜேஸ்வரியிடம் கேட்டபோது, " நீண்டகாலமாக அப்பள்ளியில் கோயில் உள்ளது. அந்தப் பள்ளி மாணவர்களுக்கு அதனால் இடையூறு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே''என்றார்.

'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று சொல்வதுண்டு. ஒவ்வொரு ஊருக்கும் வழிபாட்டுத் தலங்கள் இருப்பது அவசியம்.

ஆனால் கண்கண்ட கோயிலாக விளங்கும் பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் கோயிலை அடுத்தடுத்து விரிவுப்படுத்துவது சரியாக இருக்காது என்கின்றனர் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள்.

- ந.முருகவேல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x