Published : 19 Nov 2019 01:26 PM
Last Updated : 19 Nov 2019 01:26 PM

தமிழக-கேரள எல்லையில் மழை அதிகரித்து வரும் அணைகள் நீர்மட்டம்

தொடர் மழை காரணமாக உத்தமபாளையம் பகுதியில் முல்லை பெரியாற்றில் சீற்றத்துடன் கடந்து செல்லும் நீர்.

தமிழக-கேரள எல்லையில் பெய்த கன மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

கேரளாவில் கடந்த சில வாரங்களாக மழை குறைந்திருந்தது. இதனால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியில் இருந்து 127அடியாக குறைந்தது. இந்நிலையில் தேக்கடி, வல்லக் கடவு மற்றும் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 15-ம் தேதி பரவலாக மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,581 கன அடியாக உயர்ந்தது. நீர்வரத்து தொடர்ந்ததால் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று 128.50 அடியாக உயர்ந்தது.

அதேபோல் தேனி மாவட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மழை அளவு அதிகமாக இருந்தது. இதனால் சில நாட்களாகவே மூல வைகை, வைகை ஆறு, பாம்பாறு, வராக நதிகளில் நீரின் அளவு வெகுவாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மலையடிவாரங்களில் பெய்த மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் 58.50 அடியாக குறைந்திருந்த வைகை அணை நீர்மட்டம் நேற்று 60.27 ஆக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு 3,236 கன அடி நீர்வரத்து இருந்தது. 3,060 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதே போல் சண்முகாநதி முழுக் கொள்ளளவான 5.2.50 அடியையும், சோத்துப்பாறை அணை முழுக் கொள்ளளவான 126.28 அடியையும் எட்டியுள்ளது. கும்பக்கரை, சுருளி அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டு கிறது. மாவட்டத்தில் மழை அளவு நேற்று வெகுவாய் குறைந்தபோதும் வைகை ஆற்றில் வரும் நீரின் அளவு சீராக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x