

தமிழகத்தில் ஏற்கெனவே 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் விரிவான சுகாதார காப்பீட்டு அட்டைகள் வழங்கும் விழா இன்று (நவ.19) சென்னை சாந்தோமில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஆண்டுக்கு 5 லட்சம் வரை ஒருவர் மருத்துவக் காப்பீடு பெறலாம் எனத் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீதான நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், பணியிட மாற்றம் செய்வது தண்டனையாகாது எனத் தெரிவித்தார். மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும் எனக்கூறிய அமைச்சர், கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் கூறுகையில், "ஒரே நேரத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றிருக்கிறோம். இது முதல்வரின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. கல்லூரிகளுக்கான நவீன வடிவமைப்புக்கான பணி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க விண்ணப்பித்திருக்கிறோம்" என்றார்.