

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, காந்தியவாதி சசிபெருமாளின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தமிழக அரசிடம் இருந்து அறிவிப்பு ஏதும் வராததால், உடலை வாங்காமலேயே சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வந்தவர் காந்திய வாதி சசிபெருமாள். கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி சென்னையில் சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கி, 33 நாட்கள் உண்ணா விரதம் இருந்தார். பின்னர், டெல்லி உட்பட பல இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். மதுப் பழக்கத்துக்கு ஆளானவர்களின் கால்களில் விழுந்து கும்பிட்டு மதுவை கைவிடுமாறு வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் சசிபெருமாள் கலந்துகொண்டார். அப்போது சசிபெருமாளும், உண்ணாமலைக் கடை பேரூராட்சி தலைவர் ஜெயசீலனும் காலை 8 மணிக்கு அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர். பிற்பகல் 1.15 மணி வரை இந்தப் போராட்டம் நீடித்தது. கடையை 7 நாட்களுக்குள் அகற்றி விடுவோம் என டாஸ்மாக் அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, கோபுரத்தின் உச்சியில் மயங்கிய நிலையில் இருந்த சசிபெருமாளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவரது உடலில் ரத்தம் கசிந்திருந்தது. பின்னர் அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சசிபெருமாளின் உடல், ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர் ராஜேஷ் தலைமை யிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். உடலை பெற்றுச் செல்வதற்காக சேலம் மாவட்டம் இடைப்பாடியை அடுத்த இடங்கணசாலை கிராமத்தில் இருந்து சசிபெருமாளின் தம்பி செல்வம், மகன் விவேக் உள்ளிட்ட 8 பேர் வந்திருந்தனர்.
உறவினர்கள் கோரிக்கை
‘தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், பெண்கள் கூடும் இடங்கள், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும். குறைந்தபட்சம் படிப்படியாக இதை செய்வதாக அரசு தரப்பில் வாக்குறுதி தர வேண்டும். இல்லாவிட்டால் உடலை வாங்கிச் செல்ல மாட்டோம்’ என உறவினர்கள் தெரிவித்தனர்.
அவர்களிடம் முதலில் அகஸ்தீஸ் வரம் வட்டாட்சியர் வாசுகி, கோட் டாட்சியர் மதியழகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் மதியம் 12 மணி அளவில் சசிபெருமாளின் மகன் விவேக் மயக்கமடைந்தார். அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சசிபெருமாளின் பிரேத பரிசோதனை நடந்த மருத்துவமனை வளாகத்தில் அதிமுக தவிர்த்து பெரும்பாலான கட்சியினர் குவிந்திருந்தனர். ஆட்சியர் நேரில் வரவேண்டும் எனக் கூறி, அவர்கள் மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவாண், எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் அங்கு வந்தனர். ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகள் ஒரு மாதத்துக்குள் அகற்றப்படும்’’ என ஆட்சியர் உறுதி அளித்தார்.
தமிழகம் முழுவதும் மக்களுக்கு இடையூறாக உள்ள கடைகள் அகற்றப்படும் என தமிழக அரசு உறுதி அளித்தால் மட்டுமே உடலை பெற்றுச் செல்வோம் என சசிபெருமாளின் உறவினர்கள் திட்டவட்டமாக கூறினர். ஆனால், மதுக்கடைகளை மூடுவது குறித்து தமிழக அரசு சார்பில் அறிவிப்பு எதுவும் வராததால், உடலை வாங்க மறுத்துவிட்டு, மதியம் 1.30 மணிக்கு உறவினர்கள் அனைவரும் சேலத்துக்கு திரும்பிச் சென்றனர்.