Last Updated : 19 Nov, 2019 11:32 AM

 

Published : 19 Nov 2019 11:32 AM
Last Updated : 19 Nov 2019 11:32 AM

ராஜேந்திர பாலாஜி அமைச்சரா இல்லை ஜோதிடரா?- திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கிண்டல்

விருதுநகர்

"ராஜேந்திர பாலாஜி அமைச்சரா இல்லை ஜோதிடரா" என கிண்டல் செய்துள்ளார் திமுக முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சாத்தூர் ராமச்சந்திரன்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி விருதுநகரில் இன்று (நவ.19) திமுக மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு புதிய நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. ஒன்று விருதுநகரில் மருத்துவக் கல்லூரி அமையவிருப்பது. இதற்கு இப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தாலும் மூலகர்த்தா அப்போதைய முதல்வர் கருணாநிதியே.

அதேபோல் அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சீவலப்பேரியில் இருந்து தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் எங்கள் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமே. இப்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு முழுமுயற்சி எடுத்தது நானும், தங்கம் தென்னரசும் தான். யார், யார் வீட்டில் குடிநீர் இணைப்பு இல்லையோ அங்கெல்லாம் கொடுப்பதுதான் நோக்கமாக இருந்தது. அது நிறைவேறியிருக்கிறது.

இந்த இரண்டும் நனவானதில் மகிழ்ச்சி.

திமுகவினரின் கைகள் என்ன புளியங்கா பறிக்குமா?!

உள்ளூர் அமைச்சரின் (ராஜேதிர பாலாஜி) பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவினரின் சட்டையைப் பிடிப்பேன், வீட்டுக் கதவைத் தட்டுவேன், தேர்தலில் சித்து விளையாட்டைக் காட்டுவேன் என்றெல்லாம் பேசுகிறார்.

6 கோடி பேரில் 32 பேருக்குதான் அமைச்சர் பதவி கிடைக்கிறது. அப்படிப்பட்டவர்கள் எவ்வளவு பொறுப்புடன் பேச வேண்டும். அரசியல் விமர்சனம் வேறு இப்படிப் பேசுவது வேறு.

விமர்சனங்களைக் கடந்து அவர் இப்படிப் பேசினால் திமுக காரன் கை ஒன்று புளியங்கா பறித்துக் கொண்டு இருக்காது. திமுகவை அழிப்பது என்பது அதிமுக கட்சியாலோ அல்லது அதன் அமைச்சர்களால் முடியாது. தியாகப் பரம்பரையில் இருந்து எங்களுக்கு ஒரு தலைமை கிடைத்திருகிறது. ராஜேந்திர பாலாஜியின் பேச்சுகளுக்கு எல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் சக்தி என்னவென்று காட்டுவோம்

ராஜதந்திரம் முக்கியம்:

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற ராஜதந்திரம் முக்கியம். அதை திமுக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. எந்தெந்தப் பகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி கிட்டும் என்று நாங்கள் திட்டமிட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். உள்ளூர் அமைச்சரோ திமுகவுக்கு ஆள் கிடைக்கவில்லை எனக் கூறிக்கொண்டு இருக்கிறார். எங்களின் பலம் என்னவென்பது எங்களுக்குத்தானே தெரியும். உள்ளாட்சித் தேர்தலில் ராஜதந்திரமே பலிக்கும், ஆர்ப்பாட்டம் செய்து வெற்றி பெற முடியாது. ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் நாங்கள் அரசியல் செய்கிறோம். எங்களுக்கு ஆர்ப்பாட்ட அரசியலில் நம்பிக்கையில்லை.

வெற்றிடம் இல்லை..

ரஜினிகாந்த் சொல்வதுபோல் அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை. தலைவர் இருக்கும்போதே தளபதி வந்துவிட்டார். இன்றுவரை அமைப்பு சிதறாமல் இருக்கும் கட்சி திமுக மட்டும்தான். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வெற்றிடம் வந்திருக்கிறது. திமுகவில் அப்படி எதுவும் இல்லை.

சேவை செய்துவிட்டு வரட்டும்..

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அதற்கு முன்னதாக மக்களுக்கு சேவை செய்திருக்க வேண்டும். அவர்களுக்காக தியாகம் செய்திருக்க வேண்டும். சினிமாவில் நடித்துவிட்டு ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்தால் உண்மையான தியாகிகளுக்கு, சேவையாட்களுக்கு என்ன மரியாதை?

எப்போது ஜோதிடர் ஆனார்?

ஸ்டாலின் தமிழக முதல்வராவது மக்கள் கைகளில் இருக்கிறது. ஆனால், ராஜேந்திர பாலாஜி அடிக்கடி ஸ்டாலினின் ஜாதகத்தில் முதல்வராவதற்கான அமைப்பு இல்லை எனக் கூறுவதாக நீங்கள் (பத்திரிகையாளர்கள்) சொல்கிறீர்கள். இதுநால் வரை ராஜேந்திர பாலாஜியை நான் அமைச்சரென்றுதான் நினைத்திருந்தேன். அவர் எப்போது ஜோதிடர் ஆனார் என்று எனக்குத் தெரியவில்லை"எனப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x