

தென் பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக் கத் தவறிய அதிமுக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் வரும் 21-ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப் பதாவது:
தென் பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேற் கொண்டுள்ள அணை உட்பட 5 திட்டப் பணிகளுக்கு தடை விதிக்க எந்தக் காரணமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கைக்குகூட பொதுப்பணித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் பழனிசாமி பதில் சொல்லவில்லை.
அதிமுக அரசின் சட்டத் தோல்விக்கும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கை அலட்சியமாக நடத்திய தற்கும் பொதுப்பணித் துறைக்கு தொடர்பே இல்லாத அமைச்சர் டி.ஜெயக்குமாரை வைத்து பதில ளிக்க வைத்துள்ளனர். 5 மாவட்ட பொதுமக்கள், விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினைகளில் விபரீத விளையாட்டு நடத்துவதை அதிமுக அரசு வாடிக்கையாக கொண்டுள்ளதையே அமைச்சர் டி.ஜெயக்குமாரின் அறிக்கை வெளிப்படுத்துகிறது.
எனவே, தமிழக உரிமையைப் பாதிக்கும் தென் பெண்ணையாற்று திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள அதிமுக அரசைக் கண்டித்து திமுக சார்பில் வரும் 21-ம் தேதி வியாழக்கிழமை கிருஷ்ணகிரி, தருமபுரி, திரு வண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெறும். இதில் மாவட்ட, நகராட்சி, ஒன்றிய, பேரூராட்சி, கிளை கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.