போரூர் ஏரியில் உள்ள தனியார் நிலத்தை சட்டப்படி அரசு கையகப்படுத்த வேண்டும்: க.பீம்ராவ் எம்எல்ஏ வலியுறுத்தல்

போரூர் ஏரியில் உள்ள தனியார் நிலத்தை சட்டப்படி அரசு கையகப்படுத்த வேண்டும்: க.பீம்ராவ் எம்எல்ஏ வலியுறுத்தல்
Updated on
1 min read

போரூர் ஏரியில் உள்ள தனியார் நிலத்தை அரசு கையகப்படுத் தலாம். அதற்கு சட்டத்தில் இடம் உண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ க.பீம்ராவ் வலியுறுத்தியுள்ளார்.

போரூர் ஏரியைச் சுற்றியுள்ள 25 குடியிருப்போர் நலச் சங்கங்கள் இணைந்து போரூர் ஏரி பாதுகாப்பு குழுவை அமைத்துள்ளன. இந்தக் குழுவின் சார்பாக ஏரி அருகே நேற்று மனித சங்கிலி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட க.பீம்ராவ் பேசியதாவது:

போரூர் ஏரியில் தனியாருக்கு சொந்தமானதாக கூறப்படும் 17 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த சட்டத்தில் இடம் உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டம் 31ஏ, 31பி உட்பிரிவு 3-ன்படியும், பொதுநலன்களுக்கான தேவை இருப்பின் TDR எனப்படும் மேம்பாட்டுக்கான உரிமை மாற்றச் சட்டம் ஆகியவற்றின் மூலம் நிலங்களை அரசு கையகப்படுத்த முடியும்.

1996-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி ஒன்றை அரசாணை 567-ன்படி, தனியார் மருத்துவமனைக்கு ரூ.4 கோடியே 65 லட்சத்துக்கு அரசு விற்றது. அந்த ஏரி தற்போது மருத்துவமனை வளாகத்துக்குள் இருக்கிறது. இதை கணக்கில்கொண்டு, தற்போது போரூர் ஏரியின் உட்பகுதியில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி போரூர் ஏரியை முழுமையாக பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனித சங்கிலியில் கலந்து கொண்ட ஐயப்பன்தாங்கல் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆர்.கே.ரவிச்சந்திரன் கூறும்போது, “ஏரியின் உட்புறத்தில் உள்ள 17 ஏக்கர் இடம் இப்போதும் ஏரியாகவே இருந்து இப்பகுதி மக்களுக்கு பயனளித்து வருகிறது. எனவே, பொதுநலன் கருதி இந்த இடத்தை ஏரியாகவே இருப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

போராட்டக்குழு செயலாளர் கே.தண்டபாணி, மதுரவாயல் பகுதி மார்க்சிஸ்ட் செயலாளர் ச.லெனின், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மனித சங்கிலியில் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in