

ரயில்வே சுரங்கப் பாதையை கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு தாம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று திமுக முதன்மைச் செயலாளரும், பெரும் புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தாம்பரம் ரயில் நிலையம் அருகில் ரயில்வே துறை சார்பில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது ரயில் பாதையைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில் முடிவு பெறுகிறது. இதனால் சாலையைக் கடக்கவும் மேற்கு தாம்பரம் செல்லவும் இந்த சுரங்கப் பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள் ளது.
எனவே, இந்தச் சுரங்கப் பாதையை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நீட்டித்து கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு தாம்பரம் வரை ரயில் பாதை, தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும். இதன்மூலம் தேசிய நெடுஞ்சாலையைக் கடப்பதால் ஏற்படும் விபத்துகள் பெருமளவில் குறைந்துவிடும்.
தற்போதுள்ள சுரங்கப் பாதையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்தச் சுரங்கப் பாதை மேற்கு தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டால் சிறுவர்கள், மாணவர்கள், முதியோர் பயன்பெறுவார்கள்.
எனவே, ரயில்வே சுரங்கப் பாதையை கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு தாம்பரம் வரை நீட்டிக்க மத்திய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டி.ஆர்.பாலு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.