Published : 19 Nov 2019 10:21 AM
Last Updated : 19 Nov 2019 10:21 AM

வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி தகவல் ஆணையர் தேர்வு கூட்டத்தை ஸ்டாலின் புறக்கணிப்பு: பணியாளர், நிர்வாக சீர்திருத்த துறை செயலாளருக்கு கடிதம்

சென்னை

வெளிப்படைத்தன்மை இல்லாத தால் தமிழக தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்வதற் கான கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த துறை செயலாளர் சீ.ஸ்வர்ணாவுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழக தலைமைத் தகவல் ஆணையரை தேர்வு செய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்வதற் காக நவம்பர் 18-ம் தேதி முதல்வர் தலைமையில் தெரிவுக் குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பங்கேற்க வேண்டும் என்ற தங்களின் கடிதம் கிடைத்தது.

எனக்கு தாங்கள் அனுப்பிய கடிதத்தில், தேடுதல் குழு அமைக்கப்பட்டதாகவும் அதன் பரிந்துரை தெரிவுக்குழுக் கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், மாநில தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள், அவர்களின் விவரங்கள் உள்ளிட்ட எந்தத் தகவல்களும் கடிதத்துடன் இணைக்கப்படவில்லை. மிகவும் அவசியமான அடிப்படைத் தகவல்களே இல்லாததால் தேடுதல் குழுவின் பரிந்துரையை பரிசீலனை செய்து தெரிவுக்குழு உறுப்பினர் என்ற முறையில் ஆக்கபூர்வமான கருத்துகளை தெரிவிக்கும் வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தவர்களின் விவ ரங்களையே கொடுக்காமல் கூட்டத்தை நடத்துவதால் ஒளிவு மறைவற்ற வெளிப்படையான ஒரு தேர்வை நடத்துவதற்கு அரசு தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. முன்கூட்டியே மாநில தலைமை தகவல் ஆணையர் யார் என்பதை முடிவு செய்துவிட்டு பெயரளவுக்கு இந்த தெரிவுக்குழுக் கூட்டத்தை நடத்துவதாக கருதுகிறேன்.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை நிலை நாட்டும் பதவியான மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யும் இந்த நடைமுறை எவ்விதத்திலும் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல. தமிழக அரசில் பரந்து விரிந்து கிடக்கும் ஊழல் தொடர்பான முக்கிய விவரங்களை மூடி மறைப்பதற்கான முயற்சியில் அரசு ஈடுபடுகிறது என்று எண்ணுகிறேன்.

ஆகவே, வெளிப்படைத்தன்மை துளியும் இல்லாத தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்வதற்கான தெரிவுக்குழு கூட்டத்தில் நான் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x