Published : 19 Nov 2019 10:09 AM
Last Updated : 19 Nov 2019 10:09 AM

பூங்கா ரயில் நிலையத்தில் ஆச்சரியம்: தண்டவாளத்தை கடந்தால்.. விடாது ‘சின்னபொண்ணு’ - வலைதளங்களில் வைரலான நாய் மாயமானதால் பரபரப்பு

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் அனைவரின் அபிமானத்தையும் பெற்று, சமூக வலைதளங்களில் வரைலான ‘சின்னபொண்ணு’ நாய் மாயமானதால் பரபரப்பான நிலை காணப்பட்டது.

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் நாலைந்து நாய்கள் சுற்றி வருகின்றன. இவற்றில், அனைவரின் அபிமானத்தையும் பெற்ற நாய் ‘சின்னபொண்ணு’.

இது நடைமேடைகளிலேயே இங்கும் அங்குமாக சுற்றிக்கொண்டு இருக்கும். நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை யாராவது கடந்து சென்றாலோ, மின்சார ரயில்களில் ஆபத்தான முறையில் தொங்கிச் சென்றாலோ விடாமல் குரைத்து அவர்களை ஒருவழி செய்துவிடும். ரயில் நிற்பதற்கு முன்பு இறங்குபவர்கள், ஓடும் ரயிலில் ஏற முயற்சிப்பவர்களையும் பார்த்து பலமாக குரைக்கும்.

அதேநேரம், பாதுகாப்பாக நடைமேடையில் நடந்து செல்லும் பயணிகளை ‘சின்னபொண்ணு’ ஒன்றும் செய்யாது. அங்கு பணியில் இருக்கும் போலீஸாருடன் சேர்ந்துரோந்தும் சுற்றும். இது பயணிகள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ரயில் நிலையநடைமேடைகளில் கடை வைத்திருப்பவர்கள் அந்த நாயைப் பற்றி வியந்து பேசுகின்றனர். விதிமீறும் பயணிகளை எச்சரிப்பதோடு, ரோந்து பணியையும் செய்யும் ‘சின்னபொண்ணு’வின் நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாகஊடகங்கள், சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கிடையில், பூங்கா ரயில் நிலைய நடைமேடைகளில் நாய்களால் இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் சிலர் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில், மாநகராட்சி கால்நடைத் துறை பணியாளர்கள் நேற்று ரயில் நிலையத்துக்கு வந்து 4 நாய்களை பிடித்துச் சென்றனர். ‘சின்னபொண்ணு’வையும் அவர்கள் பிடித்துச் சென்றதாக கூறப்பட்டதால், போலீஸார், கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சிலர் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்புகொண்டு ‘சின்னபொண்ணு’வை விடுவிக்குமாறு கூறினர். கருப்பு, பழுப்பு நிறத்தில் இருக்கும் என்று அடையாளமும் கூறினர்.

இதையடுத்து, அந்த நிறம் கொண்ட ஒரு நாயை மாநகராட்சியினர் விடுவித்தனர். ஆனால், அது ‘சின்னபொண்ணு’ இல்லை. இதனால், ‘சின்னபொண்ணு’வுக்கு என்ன ஆனதோ என்று சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, மீண்டும் மாநகராட்சி பணியாளர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் 4 நாய்களை பிடித்துச் சென்றோம். ‘சின்னபொண்ணு’ நாய் பற்றி எங்களுக்கு தெரியாது. கருப்பு, பழுப்பு நிறத்தில் இருப்பதுதான் ‘சின்னபொண்ணு’ என்று கூறியதால், அந்த நாய்க்கு மட்டும் வெறிநோய் தடுப்பூசி போட்டு விடுவித்தோம். மற்ற 3 நாய்களும் இனப்பெருக்க கட்டுப்பாடு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன’’ என்றனர்.

இத்தனை களேபரங்களும் நடந்து முடிந்த நிலையில், பூங்காரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து செல்வதற்காக சில இளைஞர்கள் அருகே செல்ல, வேகமாக குரைத்தபடியே அவர்களை நோக்கி ஓடிவந்து அவர்களை தடுத்தது ‘சின்னபொண்ணு’. மாநகராட்சி பணியாளர்கள் பிடிக்க வந்த நேரத்தில், சாதுர்யமாக அங்கிருந்து தப்பிச் சென்ற ‘சின்னபொண்ணு’, சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் பூங்கா ரயில் நிலையத்துக்கு திரும்பியது, கடைக்காரர்கள், போலீஸார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x