

அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு சென்னை திரும்பினார். தமிழக வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசு முறைப் பயணமாக கடந்த 8-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன், நியூயார்க் நகரங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சிகாகோ நகரில் அவருக்கு ‘ஆசியாவின் வளரும் தலைவர்’ என்ற விருது வழங்கப்பட்டது. உலக வங்கியின் இந்தியா, வங்கதேசம், பூடான் நாடுகளுக்கான செயல் தலைவர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளை ஓபிஎஸ் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தின் முக்கியமான திட்டங்களுக்கு ஏற்கெனவே அளித்து வரும் நிதிக்கு நன்றி தெரிவித்ததுடன், வளர்ச்சிக் கடன்களை வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.
தொழிலதிபர்களுக்கு அழைப்புசிகாகோ, வாஷிங்டன் நகரங்களில் அமெரிக்கா வாழ் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோரை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை விளக்கி, அழைப்பு விடுத்தார். தமிழகம் வந்து முதலீடு செய்தால் பல்வேறு சலுகைகள் வழங்குவது குறித்தும் அவர்கள் மத்தியில் பேசினார்.
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு தன் பங்காக 10 ஆயிரம் அமெரிக்க டாலரை துணை முதல்வர் வழங்கினார். தமிழக அரசின் நிதியுதவியை பெற்றுத்தருவதாகவும் உறுதி அளித்தார். துணை முதல்வருடன் தேனி மக்களவைத் தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார், தமிழக நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
உற்சாக வரவேற்பு அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 8.10 மணிக்கு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. அமைச்சர் கே.பாண்டியராஜன், அதிமுக துணை ஒருங்கிணைப் பாளர் கே.பி.முனுசாமி, அமைப்புச் செயலாளர் மனோஜ்பாண்டியன், செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். விமான நிலையத்துக்கு வெளியே அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘‘பல்வேறு தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்துபேசி, தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வீட்டு வசதி, குடிநீர் மற்றும் போக்குவரத்து திட்டங்களுக்கு உலக வங்கியிடம் நிதி கேட்கப்பட்டது. இதில் முதல் தவணையாக தமிழக வீட்டு வசதித் துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடி தர உலக வங்கி ஒப்புக்கொண்டுள்ளது’’ என்றார்.