Published : 19 Nov 2019 08:50 AM
Last Updated : 19 Nov 2019 08:50 AM

‘முரசொலி' அலுவலக நிலம் விவகாரம்: தேசிய எஸ்.சி. ஆணையம் சென்னையில் இன்று விசாரணை - தலைமைச் செயலாளரும் ஆஜராக உத்தரவு

‘முரசொலி' நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா என்பது தொடர்பாக தேசிய எஸ்.சி. ஆணையம் சென்னையில் இன்று விசாரணை நடத்துகிறது.

விசாரணையின்போது நேரில்ஆஜராகுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ‘முரசொலி'நிர்வாக இயக்குநர் உதயநிதி, புகார் தெரிவித்த பாஜக மாநிலச் செயலாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி' அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. இந்த இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். இதுபெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. ‘முரசொலி’ இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இதற்கிடையே, முரசொலி இட பிரச்சினை குறித்து தேசிய எஸ்.சி. ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகனிடம் பாஜக மாநிலச் செயலாளர் ஆர்.சீனிவாசன் புகார் அளித்தார். இந்தப் புகார் குறித்து விசாரித்து பதிலளிக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய எஸ்.சி. ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தேசிய எஸ்.சி. ஆணையத்தின் அலுவலகத்தில் ‘முரசொலி' நில விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடக்க உள்ளது. ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன்நடத்தவுள்ள இந்த விசாரணையின்போது நேரில் ஆஜராகுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ‘முரசொலி' நிர்வாக இயக்குநர் உதயநிதி, புகார் தெரிவித்த பாஜக மாநிலச் செயலாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இதுவரைஎடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கை, கோப்புகள், வழக்குகுறிப்புகள் உட்பட உரிய ஆவணங்களை கொண்டு வருமாறு தலைமை செயலாளரை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x