Published : 19 Nov 2019 08:43 AM
Last Updated : 19 Nov 2019 08:43 AM

ரஜினி முன்பே வந்திருந்தால் வென்றிருப்பார்; அஜித்துக்கு அரசியலில் வாய்ப்பு: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கருத்து

பாட்ஷா படம் வெளியானபோது ரஜினி கட்சியை ஆரம்பித்து இருந்தால் ஆட்சியை பிடித்திருப்பார். நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் முன்னோடியாக விளங்க வாய்ப்புள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகரில் நேற்று அவர் கூறியதாவது: வில்லிபுத்தூர் அதிமுக ஆலோசனை கூட்டத்தில், அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களைத்தான் தாக்குவோம் என்றுதான் கூறினேன். வன்முறையை தூண்டும் நோக்கில் கூறவில்லை.

பாஜகவுடன் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடருமா என்பது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். நடிகர் சிவாஜி கணேசன் பற்றி முதல்வர் பேசிய கருத்து திரித்து கூறப்பட்டு வருகிறது. அமமுகவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கூறியது பொதுவான கருத்துதான். அவர் ஒரு ஆன்மீகவாதி. நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதிசயம் எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்.

விஜய், ரஜினி, கமல் கூட்டணி சேர்ந்தால் அவற்றை எதிர்கொள்ளும் அளவுக்கு அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும். நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் முன்னோடியாக விளங்க வாய்ப்புள்ளது. நாளை என்ன நடக்கும் என யாருக்கு தெரியும். பாட்ஷா படம் வெளியானபோது ரஜினி கட்சியை ஆரம்பித்து இருந்தால் அவர் ஆட்சியை பிடித்திருப்பார். காலம் தாழ்த்தி விட்டார் ரஜினி. இனி வரும் தேர்தல்களில் பணத்தை வைத்து மட்டும் வெற்றிபெற முடியாது. மக்களின் ஆதரவு வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x