17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதியுதவி 

17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதியுதவி 
Updated on
1 min read

17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்காக முதல்வர் பழனிசாமி தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார்.

17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 12.12.2019 முதல் 19.12.2019 வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் நிதியுதவி அளிப்பது வழக்கம். 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான திரு. ஏ. தங்கராஜ் இன்று முதல்வர் பழனிசாமி வழங்கினார். இந்நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''திரைப்பட உலகிற்குப் பெருமை சேர்த்திடும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திட 2013-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு 10 கோடி ரூபாயை மானியமாக வழங்கினார்.

2011-ம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாயும், 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.

2018-ம் ஆண்டு, சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு வழங்கப்பட்டு வந்த 50 லட்சம் ரூபாயை, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினார். அந்த வகையில், சென்னையில் நடைபெறவுள்ள 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று, இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ. தங்கராஜிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப., நடிகர்கள் மோகன், மனோபாலா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழா குழுவினர் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in