

தேனி
"ரஜினி சொல்வது போல தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை. அவரின் கருத்து அரசியலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தேனி அருகே வீரபாண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் வே.பெத்தாட்சிஆசாத் தலைமை வகித்தார். மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி, திண்டுக்கல்லைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள கட்சியினர் தயாராக இருக்க வேண்டும. தகுதி உள்ளவர்களையே உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கட்டாயப்படுத்த வேண்டாம். எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக கட்சியில் ஆட்களை சேர்க்கக்கூடாது.
தேர்தலில் வெற்றிக்கான விஷயங்களை ஆய்வு செய்து அதை முன்னெடுத்து களத்தில் இறங்க வேண்டும். நிராயுதபாணியாக இருந்தால் வீழ்த்தப்படுவோம். எனவே எதிரணியினரை நிலைகுலைய வைக்கும் அளவிற்கு தேர்தல் பணி இருக்க வேண்டும் என்றார்.
பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் மாநிலம் முழுவதும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகவில்லை. ஊழலும், முறைகேடும் அதிகரித்துள்ளது. தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் இத்தேர்தலை நடத்த வேண்டும்.
புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டு, இடஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும். ஆனால் இதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்று தமிழக அரசு சொல்வதை ஏற்க முடியாது.
இலங்கையில் இறுதிக்கட்ட போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர் கோத்தபயராஜபக்சே. தற்போது அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். எனவே அங்குள்ள தமிழர்களின் வாழ்வு, சமூக நிலைகளை உறுதிப்படுத்துவது அவசியம்.
மோடி அரசு பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் மக்களின் உணர்வுகளை மறந்து அவர்கள் விரும்பும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
ரஜினி சொல்வது போல அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை. இவரின் கருத்து அரசியலில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. அரசியலுக்கு வந்தபிறகு அவர் தனது கருத்துக்களைத் தெரிவிக்கலாம். மற்ற கட்சிகளைப் போல இங்கு விருப்ப மனு பெறுவது கிடையாது. நிர்வாகிகள் பரிந்துரைக்கு ஏற்ப வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
களப்பணி மூலம் எங்கெங்கு வெற்றி வாய்ப்புகள் உள்ளன என்று ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.