

பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ.18) வெளியிட்ட அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து 20.11.2019 முதல் 29.2.2020 வரை பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் கண்மாய்களின் மூலம் 1,676.48 ஹெக்டேர் நிலங்களும், நேரடி பாசன கால்வாய் மூலம் 249.47 ஹெக்டேர் நிலங்களும் ஆக மொத்தம் 1,925.95 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்," என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.