Published : 18 Nov 2019 03:28 PM
Last Updated : 18 Nov 2019 03:28 PM
காரைக்கால் மீனவப் பெண்களுக்கு, ஒரு ஆண்டு கெடாமல் இருக்கும் மீன் குழம்பு தயாரிப்பது குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நாகை கீச்சாம்குப்பத்தில் தமிழ்நாடு டாக்டர்.
ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மீன்பதன தொழில் நுட்ப கூடத்தில், காரைக்கால் மாவட்டம் பட்டினச்சேரி ஆத்மா குழு மீனவப் பெண்களுக்கு மீனை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்க பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் நடைபெற்ற பயிற்சியை மீன் பதன பொறியியல் துறை இணை பேராசிரியர் என்.மணிமேகலை தொடங்கி வைத்துப் பேசினார். மீன்வள பல்கலைக்கழக முதல்வர் ராஜ்குமார் மீன்கள் மதிப்பு கூட்டுதலின் அவசியம் குறித்துப் பேசினார். பேராசிரியர் கே.ரத்னகுமார் மீன் பொருட்களின் மதிப்பு கூட்டுதலின் பொருளாதார முக்கியத்துவத்தையும், அதை சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் குறித்தும் கூறினார்.
பயிற்சியில், மீன் மதிப்பு கூட்டுதலில் மீன் குழம்பு தயாரிக்கப்பட்டு, அதை ஒரு ஆண்டு வரை கெடாமல் இருப்பதற்கான செயல்முறை செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், மீன் பொருட்களை கொண்டு மீன் பிஸ்கெட், மீன் பாஸ்தா எவ்வாறு செய்வது எனவும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில், மீன்வள பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் கார்த்திக்குமார் நன்றி கூறினார்.