Published : 18 Nov 2019 03:29 PM
Last Updated : 18 Nov 2019 03:29 PM

இலங்கை தமிழர்களின் நலனைப் பாதுகாக்க இப்போதிருந்தே நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

கோத்தபய ராஜபக்ச வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளையும் தொடக்கத்திலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச, 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது கண்டு, ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள்.

கோத்தபய ராஜபக்சவின் வெற்றியை, இன்றைய சூழலில் ஜனநாயகரீதியாகக் கடந்து போகவும் முடியாது. அவருடைய பழைய வரலாறு, ஈழத் தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரானது என்பதையும், அதனால் ஏற்பட்ட கொடுமையான விளைவுகளையும், இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் பிரச்சினைகளையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும், உலக நாடுகளும் நன்கு அறியும்.

முன்னர் கொண்டிருந்த பகை, ஆதிக்க மேலாண்மை உணர்ச்சியிலிருந்து அவர் விடுபட்டு, தமிழ் மக்கள், அரசியல் சட்ட ரீதியாக இலங்கையின் அனைத்து உரிமைகளும் படைத்த குடிமக்களே என்பதை உணர்ந்து, அதற்கேற்ப மனசாட்சியுடனும், மனிதநேயத்துடனும், சமத்துவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அது ஒன்றே அவருடைய அரசியல் வாழ்க்கையில் பொருள் பொதிந்த புதிய பாதையாக அமைந்திடும் என்றும் உலகச் சமுதாயம் எதிர்பார்க்கிறது. திமுகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது.

கோத்தபய ராஜபக்ச வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடியும், மத்திய பாஜக அரசும், ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடக்கத்திலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x