Published : 18 Nov 2019 04:56 PM
Last Updated : 18 Nov 2019 04:56 PM

சுற்றுலா பயணிகள் அறிந்திராத கொடைக்கானல் தேவதை நீர்வீழ்ச்சி: அடிப்படை வசதிகளை செய்து தருமா சுற்றுலாத்துறை? 

கொடைக்கானல் பாம்பார்புரம் அருகே உள்ள இயற்கை எழில் கொஞ்சும் தேவதை நீர்வீழ்ச்சி. படம்: பி.டி. ரவிச்சந்திரன்

கொடைக்கானலில் எழில் கொஞ்சும் தேவதை நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் அறிந்திராத நிலை உள்ளது.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிரை யண்ட் பூங்கா, மோயர் பாயிண்ட், குணா குகை, தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட் ஆகிய பகுதிகளை பார்த்துவிட்டு ஏரியில் படகு சவாரி செய்துவிட்டு செல்கின்றனர். ஆனால், இவை தவிர இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் அதிகம் உள்ளன. இவற்றை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கொடைக்கானல் நகருக்குள் நுழையும் இடத்தில் வெள்ளி நீர்வீழ்ச்சி தொடங்கி கரடிச்சோலை நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர் வீழ்ச்சி, தேவதை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன. பலர் வெள்ளி நீர்வீழ்ச்சியை மட்டும் ரசித்துச் செல்கின்றனர். பிற நீர்வீழ்ச்சிகள் எங்கு இருக்கின்றன என்றே பலருக்கும் தெரியாது. இவற்றில் ஒன்றுதான் தேவதை நீர்வீழ்ச்சி.

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 12 மைல் சுற்றுச்சாலையில் பாம்பார்புரம் அருகே தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய நுழைவாயிலில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. வட்டக்கானல் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலைப் பிரிவில் இருந்து எதிர்புறம் சென்றால் தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையத்தை அடை யலாம். இந்நீர்வீழ்ச்சியை காண வட்ட வடிவ நடை மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

பலருக்கும் இந்த இடம் தெரியாததால் இதன் அழகை காணாமல் சென்று விடுகின்றனர். இந்த இடத்துக்குச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. வாகனம் நிறுத்தும் வசதியும் இல்லை. இதனால் தேவதை நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்காமல் உள்ளது. இந்தச் சாலையைச் சீரமைத்து, வாகனம் நிறுத்த வசதி ஏற்படுத்த வேண்டும் எனச் சுற்றுலா பயணிகள் எதிர் பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x