

அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில் பணிபுரிந்தவர் உதவி பேராசிரியர் நிர்மலாதேவி; இவர் தன்னிடம் பயின்ற சில மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவரை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்புசாமி ஆகியோரும் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
திருவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று (நவ.18) நடைபெற உள்ளது. இந்நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து மிரட்டல் வருவதாக தனது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனிடம் நிர்மலாதேவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியது:
நிர்மலாதேவியை அவரது கணவர், குழந்தைகள் சந்திக்க விடாமல் சிலர் மிரட்டுகின்றனர். நீதிமன்றத்தில் வேறு எதுவும் பேசக்கூடாது. உங்களது குழந்தைகளைக் கடத்துவோம், முகத்தில் ஆசிட் ஊற்றுவோம் என்றெல்லாம் மிரட்டுவதாகவும், வீட்டில் தனியாக இருக்கவே பயமாக இருப்பதாவும் என்னிடம் நிர்மலாதேவி தெரிவித்தார்.
வழக்கை விரைந்து முடித்தால் வெளிநாடு சென்று விடுவேன். என்னால் இங்கே இருக்க முடியாது என அவர் புலம்பினார். சில நாட்களுக்கு முன்பு, அவர் தங்கி இருக்கும் வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசி உள்ளனர். இரு தினங்களுக்கு முன், அமைச்சர் ஒருவரின் பெயரைக் கூறி, கதவை தட்டியதாகக் கூறினார்.
வழக்கில் சம்பந்தப்பட்ட வர்களை நீதிமன்றத்தில் நிர்மலாதேவி கூறி விடக்கூடாது என்ற கோணத்தில் அவர் மிரட்டப் படலாம் எனக் கருதுகிறேன். இந்த பின்னணியில் சில விஐபிக்கள் இருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.
நிர்மலாதேவியை நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்க்க உள்ளோம். அவரது உடல்நலம் கருதி விசாரணையை ஒத்தி வைக்க வாய்தா வாங்குவோம் என்றார்.