திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் கஜா புயல் பாதிப்பு கிராமங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள்: 2 நர்சரிகளில் பிரத்யேகமாக உற்பத்தி செய்து, நடும் பணிகள் தீவிரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்மாதிரி முயற்சியாக திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் ஒரு லட்சம் மரக் கன்றுகள் பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்பட்டு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நடப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு நவ.16-ம் தேதி கஜா புயலின் கோர தாண்டவத் தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன. இதையடுத்து, பொது மக்கள் சார்பில் அவரவர் சொந்த இடங்களிலும், மரம் ஆர்வலர்கள் சார்பில் பொது இடங்களிலும் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமே பிரத்யேகமாக 2 இடங்களில் நர்சரி கார்டன்களை அமைத்து, பல்வேறு விதமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, அவற்றை திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் நட்டு வருகிறது. கன்றுகளை உற்பத்தி செய்வதுடன், அவற்றை நடுவது, பராமரிப்பது போன்ற பணிகளும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:
மாவட்டத்தில் பசுஞ்சோலை யாக காணப்பட்ட திருவரங்குளம் வட்டாரம், புயலுக்குப் பிறகு வெட்டவெளியாக மாறியது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் மரக்கன்று களை நட முடிவு செய்யப்பட்டு, அதற்குத் தேவையான மரக்கன்று களை ஊராட்சி ஒன்றிய நிர்வாகமே உற்பத்தி செய்துகொள்ள ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உள்ளிட்டோரிடம் அனுமதி பெறப்பட்டது.
பின்னர், கொத்தமங்கலம் மற்றும் பாலையூரில் தண்ணீர் உள் ளிட்ட வசதிகளுடன் நிரந்தரமாக மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதற்கான 2 நர்சரி கார்டன்கள் உருவாக்கப்பட்டன. அந்த 2 கார்டன்களிலும் தலா 50 ஆயிரம் வீதம் மா, பலா, வேம்பு, புங்கன், புளி, தேக்கு, கொய்யா, மாதுளை, எலுமிச்சை போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 15,000 மரக்கன்றுகள் இதுவரை நடப்பட்டுள்ளன. மேலும், தற்போது மழைக்காலம் என்பதால், மீதிக் கன்றுகளையும் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொத்தமங்கலம், நகரம் மற்றும் நெடுவாசல் மேற்கு ஆகிய கிராமங்களில் குறுங்காடுகள் ஏற் படுத்தப்பட உள்ளன. மரக்கன்று களை உற்பத்தி செய்தல், நடுதல் மற்றும் தண்ணீர் ஊற்றி பராம ரித்தல் போன்ற பணிகள், தேசிய ஊரக உறுதியளிப்புத் திட்ட பணியாளர்கள் மூலம் மேற்கொள் ளப்படுகின்றன.
இத்திட்டம் வரும் ஆண்டுகளில் விரிவுபடுத்தப்பட்டு, இந்த ஒன்றி யத்துக்கு உட்பட்ட 48 ஊராட்சி களையும் சோலையாக மாற்றுவதே இலக்காகும் என்றார்.
- கே.சுரேஷ்
