Published : 18 Nov 2019 01:31 PM
Last Updated : 18 Nov 2019 01:31 PM

சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையில் கோவை மாநகரில் தேங்கி கிடக்கும் குப்பை: முழுமையாக அகற்ற மாநகராட்சிக்கு வலியுறுத்தல் 

ஆவாரம்பாளையம் மகாத்மா காந்தி சாலையில் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பை. படங்கள்: ஜெ.மனோகரன்

கோவை மாநகரில், குவிந்து காணப்படும் குப்பையை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாநகரில் 3,500-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. நிரந்தர, ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் 4,500-க் கும் மேற்பட்டோர் உள்ளனர். 20 சுகாதார ஆய்வாளர்கள், 5 மண்டல சுகாதார அலுவலர்கள் உள்ளனர். மாநகரில் தினசரி சராசரியாக 1,150 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. 40 ஆட்டோக்கள், டிப்பர் லாரிகள், தொட்டியில் இருந்து குப்பையை கொட்டும் ஹைட்ராலிக் லாரிகள், குப்பைத் தொட்டியை எடுத்துச் செல்லும் ஹைட்ராலிக் லாரிகள், அதிக குப்பையை எடுத்துச் செல்லும் பெரிய டிப்பர் லாரிகள் என 232 லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன.

இருப்பினும், மாநகரில் பல இடங்களில் குப்பை அள்ளப்படா மல் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவாரம்பாளை யம் ராஜ்குமார், வி.கே.கே.மேனன் சாலை கண்ணன், சாயிபாபாகாலனி  பிரசாத், பீளமேடு சரவணன் மற்றும் சமூகஆர்வலர்கள் கூறும்போது,‘‘மாநகரில் 2 முதல் 5 வீதிகளுக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு குப்பை கொட்டப்படுகிறது. சாலையோரங்களில் அரை டன், ஒரு டன், 2 டன் என்ற கொள்ளளவுகளில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட் டுள்ளன. பீளமேடு, ஆவாரம்பாளை யம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, சிவானந்தாபுரம், கணபதி, காந்தி புரம், வடகோவை, சாயிபாபா காலனி, உக்கடம், குறிச்சி, போத்த னூர், குனியமுத்தூர், ராமநாதபுரம், சுங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குப்பை தேங்கியும், தொட்டி நிரம்பி வழிந்தும் காணப்படுகின்றன.

ஒரே இடத்தில் தேங்கி காணப்படும் குப்பையால், துர்நாற்றம் வீசுவதோடு, அவை காற்றில் பறந்து அருகேயுள்ள குடியிருப்புகளுக்குள் விழுகின்றன. சாலைகளில் பரவியும், வாகன ஓட்டுநர்கள் மீதும் விழுகின்றன. குப்பையால் நோய் பாதிப்பும் ஏற்படும் வாய்ப்புள்ளது. பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள் உடைந்து, சேதமடைந்து காணப்படுகின்றன. அதில் போடப்படும் குப்பை, ஓட்டை வழியாக வெளியேறி மீண்டும் சாலைகளில் விழுகிறது. தரம் பிரித்து குப்பை சேகரிக்கும் திட்டமும் முழு செயல்பாட்டுக்கு வரவில்லை. சில இடங்களில் மக்கள் குப்பையை தரம் பிரித்தாலும், அதை வாங்க துப்புரவு பணியாளர் கள் வருவதில்லை’’ என்றனர்.


அவிநாசி சாலையில் தேங்கி காணப்படும் குப்பை.

குப்பை அளவு அதிகரிப்பு

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது,‘‘மாநகரில் தினசரி சேகரமாகும் குப்பையின் அளவு 950 டன்னில் இருந்து 1,150 டன்னாக அதிகரித்துள்ளது. இதற்கான காரணம், எந்த வகையான குப்பை எவ்வளவு சேகரமாகிறது என ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும், மத்தியஅரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி, ஒரு நாளைக்கு 100 கிலோவுக்கு அதிகமாக (பல்க் வேஸ்ட்) குப்பை சேகரிக்கப்படும் இடங்களில், அந்த குப்பையை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து, மக்கும் குப்பையை உரமாக தயாரிக்க மையம் அமைத்து இருக்க வேண்டும். மாநகரில் தற்போதைய சூழலில் 700-க்கும் மேற்பட்ட கட்டி டங்களில், தினசரி தலா 100 கிலோ வுக்கு மேல் குப்பை உற்பத்தியாகி றது. இங்கு குப்பையை சேகரிக்க செல்வதால், மற்ற இடங்களில் குப்பை சேகரிப்பு சற்று பாதிக்கிறது. இதனால் முதல்கட்டமாக 80 கட்டிடங்களில் குப்பை சேகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் இரண்டு வார்டுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் இருக்க வேண்டும். அதன்படி குறைந்தபட்சம் 50 சுகாதார ஆய்வாளர்கள் இருக்க வேண்டிய மாநகராட்சியில், தற் போது 25 சுகாதார ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர். ஒவ்வொரு வரும் 4 முதல் 7 வார்டுகள் கூடுதலாக கவனிக்கின்றனர். இதனால் குப்பை சேகரிப்பை சுகாதார ஆய்வாளர் களால் முழுமையாக கண்காணிக்க முடிவதில்லை. மேலும், தேவைக் கேற்ப இல்லாமல், துப்புரவு தொழி லாளர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இதுவும் குப்பை சேகரிப்பு பணி தொய் வடைய ஒரு காரணமாகும். சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு தொழி லாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உயரதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், இருக்கும் பணியாளர்களை கொண்டு, மாநகரில் தேங்கும் குப் பையை அகற்றும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

தரம் பிரித்து குப்பை சேகரிப்பு

மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும் போது,‘‘ மாநகரில் தரம் பிரித்து குப்பை சேகரிக்கும் பணி, தேங்கி காணப்படும் குப்பையை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லாரிகள் மூலம் குப்பை முறையாக அகற்றப்படுகிறதா என்பது பிரத் யேக மென்பொருள் மூலம் கண் காணிக்கப்படுகிறது. தரம் பிரித்து குப்பையை சேகரிக்க பிரத்யேக வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன. 100 கிலோவுக்கு மேல் குப்பை உற்பத்தி செய்யும் கட்டிடங்களில் அவர்கள்தான் அகற்றவேண்டும்’’என்றார்.

- டி.ஜி.ரகுபதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x