

மாணவர்கள் தற்கொலை மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார்.
பாமக சார்பில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப் பேட்டையில் பாமக கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
‘‘ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த செய்திகளெல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. ஏனெனில் இதுபோன்ற மாணவ, மாணவிகள் இந்தியாவின் சொத்துகள்.
அதிமுகவுக்கு இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி, உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். முறையான பராமரிப்பு எதுவும் செய்யாமல், சுங்கச் சாவடியில் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது. தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தைப் பொறுத்தவரையில் அதற்கு ஒதுக்கப்படும் நிதியில் 40% மட்டுமே கட்டுமானத்துக்கு செலவிடப்படுகிறது.
மீதமுள்ள 60 சதவீதமும் சாலைகள் பராமரிப்புக்குத்தான். ஆனால் சாலைகளின் தரம் இன்னும் மோசமாகவே இருகிறது. பராமரிப்பு எதுவும் செய்யாமல், சுங்கச் சாவடியில் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தை அணுக உள்ளோம்’’ என்று அன்புமணி தெரிவித்தார்.