

ரஜினி நினைக்கும் அதிசயம் நிச்சயம் நடக்காது என, முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற 'கமல் - 60' விழாவில் பேசிய ரஜினிகாந்த், "2 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அவர் முதல்வரானவுடன் ஆட்சி 20 நாட்கள் கூட தாங்காது. 1 மாதம் தாங்காது. 5 மாதம் தான் கவிழ்ந்துவிடும் என்று 99% பேர் சொன்னார்கள். அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. எல்லா தடைகளையும் தாண்டி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம், அற்புதம் நடக்கிறது. நாளைக்கும் அதிசயம், அற்புதம் நடக்கும்," என பேசினார்.
இதுதொடர்பாக இன்று (நவ.18) தொலைக்காட்சி ஒன்றுக்கு அதிமுகவின் செம்மலை அளித்த பேட்டியில், "ரஜினி நினைக்கும் அதிசயம் நிச்சயம் நடக்காது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆனார் என்றால், அதிமுக என்ற அடித்தளம் இருந்தது. ஆசைப்படும் எல்லாவற்றையும் அடைய முடியாது. சினிமாவில் 'டூப்' போடலாம். அரசியலில் 'டூப்' போட முடியாது.
இப்படி பேசும் ரஜினி, கமல் போன்றவர்கள், அரசியல், ஆளுமை, தலைமைப்பண்பு என்றால் என்ன என்பது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும். எந்த முதல்வரை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்? ஒரு கட்சி தேர்ந்தெடுக்கும் எம்எல்ஏக்கள் தான் முதல்வரை தேர்ந்தெடுக்கின்றனர். முதல்வர், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்எல்ஏக்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர்கள் எங்களை நேரடியாக தாக்கும் போது நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்," என தெரிவித்தார்.