கோப்புப் படம்
கோப்புப் படம்

தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் கனிமொழி தரப்பு கோரிக்கை 

Published on

தூத்துக்குடி தொகுதியில் தான் வெற்றிப்பெற்றதற்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தாக்கல் செய்த மனு மீது நாளை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து அத்தொகுதியின் வாக்காளர் வசந்தகுமார் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். வழக்கில், கனிமொழி தனது வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்திருப்பதாகக் கூறியிருந்தார்.

தனது கணவர் அரவிந்தனின் வருமானம் மற்றும் அவருடைய வருமான வரி தொடர்பான விவரங்களை கனிமொழி வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என்றும், தனது கணவர் சிங்கப்பூர் குடிமகனாக இருப்பதைச் சுட்டிக் காட்டி அவரது வருமான வரி தொடர்பான விவரங்கள் தனக்கு பொருந்தாது என கனிமொழி வேட்பு மனுவில் தெரிவித்திருந்ததாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி அது தவறு என்றும் மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார்.

முழுமையான விவரங்கள் இல்லாத கனிமொழியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது சட்டவிரோதமானது எனவும், எனவே அவருடைய தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் அவரது மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் கடந்த செப்டம்பர் மாதம் 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இன்று இந்த வழக்கில் மனு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

இதில் வழக்கை தொடுத்த வாக்காளர் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கனிமொழி தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை நாளைத் தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த வழக்கை நிராகரிக்கவேண்டும் எனவும் கனிமொழி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்கிற கனிமொழியின் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்து, விசாரணையை தள்ளி வைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in