

மதுரை
மேலவளவு ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் 13 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் உரிய ஆவணங்களுடன் அதிகாரிகள் நாளை (நவ.19) ஆஜராக உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், "முருகேசன் உட்பட 7 பேர் கொலையில் தொடர்புடைய 13 பேர் விடுதலை செய்யப்பட்டது வருத்தம் தருகிறது. தருமபுரி பஸ் எரிப்பு வழக்கிலும் இவ்வாறு தான் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
அனைத்தையும் விட மனித உயிர்கள் முக்கியமானது. மனித உயிரை பறிக்கும் குற்றவாளிகளை தண்டனை காலம் முடியும் முன்பு விடுதலை செய்வது சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும்" என கருத்து தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட 7 பேர், கடந்த 1997-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். பேருந்தை வழிமறித்து 6 பேரையும் மற்றொரு இடத்தில் ஒரு நபர் என மொத்த 7 பேரை ஒரு கும்பல் படுகொலை செய்தது.
இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்தநிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 13 நபர்கள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 13 பேரின் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் பி.ரத்தினம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், "வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 7 பேர் கொல்லப்பட்டுள்ள வழக்கில் 13 பேரையும் விடுதலை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 13 பேர் விடுதலை தொடர்பான உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாளை (நவ.19) உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக உத்தரவிட்டனர்.