கோப்புப் படம்
கோப்புப் படம்

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக நீதிமன்றம் பிடி வாரண்ட்

Published on

வருமான வரி வழக்கில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை பிடிவாரண்ட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.

பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இவர் கடந்த 2007-08, 2008-09-ம் ஆண்டுக்கான தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்புச் செய்ததாக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில் சாட்சிகள் விசாரணை முடிந்து, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதற்கான நடைமுறை வர உள்ளது. எதிர்மனுதாரரிடம் கேள்விகளை கேட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் நடைமுறைக்காக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இன்றும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர் வாதத்தில் “பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பின், இந்த வழக்கின் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து பிடியாணையிலிருந்து விலக்கு பெறலாம். ஆனால் அடுத்து வரும் விசாரணையில் அவர் கண்டிப்பாக ஆஜராகவேண்டி இருக்கும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in