Published : 18 Nov 2019 11:52 AM
Last Updated : 18 Nov 2019 11:52 AM

கேரள மாணவி தற்கொலை விவகாரம்: 3 ஐஐடி பேராசிரியர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன்

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேராசிரியர்களுக்கு நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாணவி மரணம் குறித்த விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். வழக்கு போலீஸாரிடம் இருந்து தற்போது மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையராக இருக்கும் ஈஸ்வரமூர்த்தி வசம் ஒப்படைப்பதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் மெகலினா இந்த வழக்கை விசாரிப்பார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, கூடுதல் துணை ஆணையர் மெகலினா உள்ளிட்டோர் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தங்கியுள்ள கேரள சமாஜத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது அதிகாரிகள் கேட்ட அனைத்து தகவல்களையும் தெரிவித்துவிட்டதாகவும், பாத்திமா உடலை முதலில் பார்த்த நபர் தங்களிடம் பேசிய ஆடியோவையும், பாத்திமா பயன்படுத்திய டைரியையும் கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். லேப்டாப், ஹார்ட் டிஸ்க், செல்போன் உள்ளிட்ட சாதனங்களை போலீஸார் கேட்ட அடிப்படையில் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்பின்னர் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து அப்துல் லத்தீஃப் புகார் கொடுத்தார். நேற்று மதியம் மத்திய உயர் கல்வித்துறை செயலர் சுப்ரமணி சென்னை ஐஐடிக்கு வந்து விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக பாத்திமா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x