Published : 18 Nov 2019 11:03 AM
Last Updated : 18 Nov 2019 11:03 AM

ஐஏஎஸ் பணி சவால்களும் சுவாரஸ்யமும் நிறைந்தது: தேர்வுக்குத் தயாராகும் இளையோருக்கு புதுச்சேரி ஆட்சியர் அருண் அறிவுரை

‘இந்து தமிழ் திசை' நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி' சார் பில், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்பி தேர்வுகளை எதிர்கொள்ளும் இளையோருக்காக ‘ஆளப்பிறந்தோம்' என்ற தலைப்பில் போட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி ஊர்கள் தோறும் நடந்து வருகின்றன.

இந்நிகழ்வு புதுச்சேரியில் நேற்று கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரிஆட்சியர் அருண் பேசியது:

யுபிஎஸ்சி தேர்வைப் பொறுத்தவரையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் என வகைகள் இருந்தாலும் அனைத்தும் மக்களுக்கான சேவைதான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான சவால்கள் உண்டு. முதல்முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்தாலும் கவலை வேண்டாம். அடுத்தடுத்து முயற்சித்து, வெற்றி அடைந்தவர்கள் ஏராளமானோர் உண்டு.

நான் முதல் தேர்வில் தோல்வியடைந்தேன். அடுத்து தேர்வு எழுதி ஐஆர்எஸ் ஆனேன். அதன் பிறகு விடுப்பு எடுத்து படித்து, ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றேன். சிவில் சர்வீஸ் தேர்வைத் தமிழிலும் எழுதலாம். ஆங்கிலம் நன்றாக தெரிய வேண்டும் என்பதெல்லாம் தவறான கருத்து. இதுபோல் பல தவறான கருத்துகள் இங்குண்டு.

உங்களின் விருப்பப் பாடமே உங்களின் பலம். உங்கள் படிப்பின் பின்புலத்தை ஆராய்ந்து, உங்களுக்கான விருப்பப் பாடத்தை தேர்வு செய்யுங்கள். மற்றவர்களுக்காக பாடங்களை தேர்வு செய்யாதீர்கள். நான் ஒரு சராசரி மாணவன். கடின உழைப்புதான் எனக்கு வெற்றியை தேடித் தந்தது. நாள்தோறும் 10 மணி நேர படிப்பு, இரண்டு வருட உழைப்பு மிக அவசியம். மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுக்குப் படித்தால் இதர தேர்வுகளை வெல்வது மிக எளிது. அனைத்துத் தேர்வுகளையும் எழுதுங்கள். அதுவே நல்ல பயிற்சி. எதுபற்றி வேண்டுமானாலும் தேர்வில் கேட்கலாம். அனைத்தையும் தெரிந்து வைத்திருங்கள்.

பொதுவாக, மருத்துவம் படித்துவிட்டு பலரும் யுபிஎஸ்சிக்குப் போக மாட்டார்கள். நான் எம்பிபிஎஸ், எம்டி படித்து முடித்துட்டு இதற்கான பயிற்சிக்கு தயாரான போது, 'இது தேவையா?' என்று வீட்டில் கேட்டனர். பெற் றோரை சமாளித்து விட்டு ஆயத்த மானேன். 29 வயதில் ஐஏஎஸ் படிக்கும்போது உதவியது பெற்றோர்தான். அவர்கள் என்னைச் சுமையாக கருதியதில்லை. தற்போதைய பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகளைப் பற்றிய புரிதல் அவசியம்.

எண்ணமும் செயலும்..

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு வந்தால் அதிக அழுத்தம் எப்போதுமே இருக்கும். புதுச்சேரியில் அது வேறு நிலையில் இருக்கும். நமது எண்ணம், செயல் சரியாக இருந்தால், நமது பணியை அனைவரும் ஏற்பார்கள்.

தொடக்கத்தில் மிசோரமில் 3 ஆண்டுகள் பணியில் இருந்த போது 6 மாதங்களுக்கு ஒரு முறை மாறுதலுக்கு உட்பட்டேன். அதில் நல்ல அனுபவம் கிடைத்தது. மிசோரமில் இருப்போருக்கு ஆங்கிலம், இந்தி தெரியாது. சைகையில்தான் பேசுவேன். பிறகு அம்மொழி புரிந்தது. பணிச்சுமை அதிகம்தான். சவால்கள், பிரச்சினைகள் அதிகம்தான். நாள்தோறும். வேறு வேறு பிரச்சினைகளை அணுகுவோம். ஆனாலும் பணி சார்ந்த வாழ்க்கை போர் அடித்ததே இல்லை. இப்போதும் சுவாரஸ்யமாகவே நகர்கிறது.

முன்பு இருந்ததை விட மக்களிடத்தில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதிகாரிகளின் செயல்பாட்டால் தேர்தல் ஆணையம் உட்பட பல்வேறு துறைகளின் முகமே மாறியிருக்கிறது. இப்பணியில் உள்ள சவால்கள் வேறு எப்பணியிலும் இல்லை. சவாலுக்கு மத்தியிலும், கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் பலன்கள் கிடைப்பதே இலக்கு. அவர்கள் மீதும் கவனம் செலுத்துவது அவசியம். மத்திய அரசு பணிக்கு தயாராக விரும்புவோருக்கு நான் உதவ தயார்; எப்போதும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

நிகழ்ச்சியை ‘இந்து தமிழ்’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியின் காட்சி ஊடக பங்களிப்பாக ‘எஸ் மீடியா சப்தகிரி குழுமம்' இணைந்தது. அடுத்த, ‘ஆளப்பிறந்தோம்' நிகழ்ச்சி கோயம்புத்தூரில் நடை பெறுகிறது.

‘இந்து தமிழ் திசை’யால் அடிப்படையை அறிந்தேன் - கிருத்திகா, பி.காம் மாணவி, புதுச்சேரி

பயனுள்ள நிகழ்வு இது. பல்வேறு தகவல்களும், வழிமுறைகளும் கிடைத்தன. எந்த மாதிரியான புத்தகங்களைப் படிக்க வேண்டும், என்பதை அறிந்தேன்.‘இந்து தமிழ் திசை'யால் போட்டித் தேர்வுக்கான அடிப்படை வழிமுறைகளை தெரிந்து கொண்டேன்.

விளம்பர நோக்கில்லாத பயனுள்ள நிகழ்ச்சி - கவுசிக், சட்டக் கல்லூரி மாணவர், புதுச்சேரி

‘இந்து தமிழ் திசை’ சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி எந்தவித விளம்பர நோக்குடனும் இல்லாமல் பயனுள்ள நிகழ்ச் சியாக இருந்தது. போட்டித் தேர்வுக்கானஅடிப்படையை எளிதாக தெரிந்து கொள்ள முடிந்தது.

மக்களை அறிய வாசிப்பு அவசியம் (சமூக செயற்பாட்டாளர், பேராசிரியர் பிரபா கல்விமணி)

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்குத் தயாராக நாள் தோறும் காலையில் நாளிதழ் படிப்பது அவசியம். அரசியல் ஈடுபாடு இருந்தால்தான் மக்களைப் பற்றிய புரிதல் வரும். அந்த புரிதலுக்கு நாளிதழை வாசிப்பது மிக அவசியம். செய்தித்தாள் படித்தால்சமூக புரிதல் வரும்; அந்த வாசிப்பால் போட்டித் தேர்வுகளையும் எளிதாய் வெல்லலாம். மத்திய ஆட்சிப் பணிக்கு தயாராகும் இளையோர் தமிழால் முடியும் என்பதை மனதில் கொண்டு தயாராக வேண்டும்.


கற்பனைதான் பெரும் செல்வம் (நடுப்பக்க ஆசிரியர் சமஸ்)

ஒரு சமூகத்தின் மிகப் பெரிய செல்வம் அதனுடைய கற்பனைதான். அந்தக் கற்பனை எவ்வள வுக்கு எவ்வளவு பரந்து விரிந்ததாகவும் எல்லோ ரையும் உள்ளடக்குவதாகவும் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்தச் சமூகம் மேன்மை பெறும். சூரியன் அஸ்தமிக்காத பெரும் சாம்ராஜ்யம் என்று பேசப்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார் வஉசி.

அந்நிறுவனத்தில் பங்குதாரராக இருக்க, அவர் தகுதியாக நிர்ணயித்தது தமிழக எல்லைக்குள்ளோ, இந்திய எல்லைக்குள்ளோ அடங்கவில்லை. ஆசியாவில் வசிக்கும் எவர் ஒருவரும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடியும் என்று அறிவித்தார். ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தின் கற்பனை இது. கற்பனையை விரிக்கும் ஒரு சமூகத்துக்கு வாசிப்பு இன்றியமையாதது.


தகுதியை உயர்த்தும் சிவில் சர்வீஸ் தேர்வு (சங்கர் ஐஏஎஸ் அகாடமி, கருத்தாளர் ரஷிதா சிவசங்கரன்)

யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானால் எந்த துறை தேர்வையும் எளிதாக அணுகலாம். நான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ஆயத்தமானேன். அந்தத் தகுதி, பின்னர் எனக்கு சந்திராயன் திட்டப் பணி யில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. இப்போது ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சியாளராக உயர்த்தியிருக்கிறது. தமிழ் முறையில் தேர்வு எழுதி வென்றோரும் உண்டு. எளிமையான மொழிப் புலமையே இத்தேர்வில் வெற்றி பெற போதுமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x