டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு

டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு
Updated on
1 min read

மேட்டூர் அணையில் இருந்து இன்று (9-ம் தேதி) டெல்டா பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின் றன. ஆண்டுதோறும் குறுவை பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.

இந்தாண்டு ஜூன் மாதத்தில் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், இரண்டு மாதம் கழித்து இன்று டெல்டா பகுதி பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறுவை, சம்பா, தாளடிப் பயிர்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். பாசன பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறையும். மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து குறுவை பாசனத்துக்கு 15 ஆண்டுகள் மட்டுமே ஜூன் 12-ம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு திருப்திகரமாக இருந்த காலங்களில் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று 11 ஆண்டுகள் ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாகவே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணை நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 96.48 அடியாக இருந்தது. விநாடிக்கு 2,268 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in