கேரள மாணவி தற்கொலை விவகாரம்: மத்திய உயர்கல்வி செயலாளர் சென்னை ஐஐடியில் விசாரணை - சிறப்பு கல்வி நிறுவனத்துக்கான தரமதிப்பீடு குறைந்ததா?
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் கல்லூரியில் விசாரணை நடத்தினார்.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் (20). இவர் சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில், பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்ஏ மானுடவியல் படித்து வந்தார். கடந்த 8-ம் தேதி இரவு தனது அறைக்குள் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வந்த மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், முதல்வர் பழனிசாமி, டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோரை 15-ம் தேதியும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை 16-ம் தேதியும் சந்தித்து மகள் தற்கொலை குறித்த விவரங்களை கூறினார்.
சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள இல்லத்தில் அப்துல் லத்தீப் தங்கியிருக்கிறார். அவரிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, விசாரணை அதிகாரியும் கூடுதல் துணை ஆணையருமான மெகலீனா ஆகியோர் 16-ம் தேதி 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். நேற்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாணவி பாத்திமா பயன்படுத்திய செல்போன், டேப், லேப்-டாப் போன்றவற்றை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் அப்துல் லத்தீப் ஒப்படைத்து இருக்கிறார்.
இந்நிலையில், மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சுப்பிரமணியன் சென்னை ஐஐடிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தி இருக்கிறார். இவர் ஏற்கெனவே முதல்வரிடமும் கேட்டறிந்துள்ளார். மேலும் இது தொடர்பான விசாரணைக்காக அவர் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தார். நேற்று ஐஐடிக்கு வந்த அவர் கல்லூரி முதல்வர், மாணவியின் மரணத்தில் தொடர்புடைய 3 பேராசிரியர்கள், மாணவியின் தோழிகள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினார்.
நாடு முழுவதுள்ள உயர்கல்வி நிறுவனங்களை சர்வதேச அளவில் மேம்படுத்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற திட்டத்தை மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் 2017-ல் கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி 10 அரசு கல்வி நிறுவனங்கள், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் என 20 உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். அவ்வாறு தேர்வாகும் அரசு உயர்கல்வி நிறு வனங்களுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி அளிக்கப்படும். இதுதவிர கல்விமுறை மற்றும் நிர்வாகம் முழுவதும் தன்னாட்சி அதிகாரம் பெற்றவையாக இருக்கும். மேலும், பல்வேறு சலுகைகள் சிறப்பு அந்தஸ்து பெறும் கல்வி நிறுவனங்களுக்கு கிடைக்கும்.
இந்த திட்டத்தின்கீழ் சென்னை ஐஐடி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது மாணவியின் தற்கொலை விவ காரம் சர்ச்சையாகி உள்ளதால், சென்னை ஐஐடியின் தரமதிப்பீடு குறைய வாய்ப்புள்ளது. இதனால் மாணவி மரணம் குறித்த நிலைமை யின் தீவிரம் குறித்து ஆய்வு நடத்த மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சுப்பிரமணியன் வந்துள்ளார்.
