Published : 18 Nov 2019 09:42 AM
Last Updated : 18 Nov 2019 09:42 AM

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இயக்கப்படும் பேட்டரி கார்: நடைமேடையில் நடந்து செல்ல முடியாமல் பயணிகள் அவதி

சென்னை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கூடுதல் டிரிப் அடித்தால் அதிக பணம் கிடைக்கும் என்பதற்காக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. இதனால் நடைமேடையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து போகின்றனர். ரயிலில் வரும் முதியவர்கள் நடைமேடையில் நீண்டதூரம் நடந்து செல்ல முடியாது என்பதால், அவர்களின் வசதிக்காக பேட்டரி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் இலவசமாக வழங்கப்பட்ட இச்சேவையில், தற்போது ஒரு பயணிக்கு ரூ.10 வீதம் கட்டணமாக வசூலிக்கப்படு கிறது. அதேநேரத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பேட்டரி கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒரு ரயில் வந்தடைந்ததும், பேட்டரி கார்கள் நடைமேடையை ஆக்கிரமிக்கின்றன. குறிப்பாக அதிகாலையில் ரயிலைவிட்டு தூக்கக் கலக்கத்துடன் இறங்கும் பயணிகள், நடைமேடையில் நிம்மதியாக நடந்து செல்ல முடியவில்லை. பேட்டரி கார்கள் குறுக்கும், நெடுக்குமாக வேகமாக செல்வதால் மோதிவிடுமோ என்ற அச்சத்துடன் நடைமேடையில் நடந்து செல்கின்றனர். கூடுதல் ‘டிரிப்’ அடித்தால் அதிக பணம் கிடைக்கும் என்பதால் பேட்டரி கார்கள் வேகமாக இயக்கப்படுவதாக ரயில் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பார்த்தசாரதி என்ற பயணி கூறும்போது, “நான் பெங்களூரு மெயிலில் வந்தேன். காலை 4.35 மணிக்கு ரயில் சென்ட்ரலை வந்தடைந்தது. நடைமேடையில் குடும்பத்துடன் சுமை களையும் எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினால், பலத்த ‘ஹார்ன்’ சத்தத் துடன் பேட்டரி கார்கள் வந்து சென்றன. சாலையில் செல்லும் ஆட்டோ, மீன்பாடி வண்டி போல வேகமாக செல்கின்றனர். நடைமேடையின் நடுவில் கடைகள் உள்ளன. இடைப்பட்ட பகுதியில் பயணி கள் கொசுவலைகளைக் கட்டி தூங்கு கின்றனர். எதிர்புறத்தில் ஒதுங்கினால் தண்டவாளத்தில் விழும் அபாயம் உள்ளது. அதிக பணத்துக்காக ஆசைப் பட்டு கட்டுப்பாடில்லாமல் இயக்கப்படும் பேட்டரி கார்களால் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறோம்.

இதுமட்டுமின்றி மூர் மார்க்கெட் புறநகர் ரயில் நிலையம் எதிரே டூவீலர், சொந்த கார், வாடகைக் கார் என ஏராளமான வாகனங்கள் எதிரும், புதிருமாகச் செல்வதால் அங்கேயும் நடந்து செல்வது கடினமாக உள்ளது. மொத்தத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பில்லை. காவல்துறையினரும் கண்டுகொள்ளாதது வேதனையளிக்கிறது" என்றார்.

பேட்டரி கார் ஓட்டுநர் ஒருவரிடம் கேட்டபோது, “நாங்கள் நிதானமாகத்தான் ஓட்டுகிறோம். ரயில் புறப்படும் நேரத்தில் வருவோரை வேறுவழியின்றி வேகமாக அழைத்துக் கொண்டு போகிறோம். எங்களால் இதுவரை எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை. சிலர் வேண்டுமென்றே எங்களைக் குறைகூறுகின்றனர்" என்றார்.

காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பகல் நேரத்தில் அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் கண் காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படு கின்றனர். அதிகாலை நேரத்தில் அவ்வளவு பேர் இருப்பதில்லை. பேட்டரி கார்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், அவற்றின் போக்குவரத்தை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x