

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தேனி, நீலகிரி, கோவை, நெல்லை உட்பட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறும்போது, “தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும் வெப்பச் சலனத்தாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
தேனி, நீலகிரி, நெல்லை, கோவை, தூத்துக்குடி, ராமநாத புரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப் படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்" என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 170 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஓட்டப்பிடாரத்தில் 70 மி.மீ., கோத்தகிரியில் 60 மி.மீ., மணிமுத்தாறு, பாபநாசம் (நெல்லை மாவட்டம்), ராஜபாளையத்தில் தலா 50 மி.மீ., அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டையில் தலா 50 மி.மீ., வில்லிபுத்தூர், சிவகிரி (நெல்லை மாவட்டம்), மணியாச்சி, கடலூர், பரங்கிப்பேட்டை, சீர்காழியில் தலா 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.