Published : 17 Nov 2019 07:24 PM
Last Updated : 17 Nov 2019 07:24 PM

பெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அர்ச்சனை செய்ய வந்த பெண் செவிலியர் ஒருவரை கோயில் தீட்சிதர் கன்னத்தில் அறைந்ததாக எழுந்த புகார் தொடர்பாக தீட்சிதர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் வ.வு.சி தெருவைச் சேர்ந்த செல்வ கணபதி என்பவரின் மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமைச் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

லதா சனிக்கிழமை இரவு நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு அர்ச்சனை செய்ய வந்தார். முக்குருணி விநாயகர் சன்னிதியில் தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு குருக்களை கேட்டுக் கொண்டார்.

ஆனால் அர்ச்சனை செய்யாமல், வெறும் தேங்காயை மட்டும் தீட்சிதர் உடைத்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து லதா, ஏன் அர்ச்சனை செய்யவில்லை என்று கேட்ட போது அவரை தீட்சிதர் தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆத்திரத்தில் லதாவின் கன்னத்தில் அறைந்ததால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

அருகில் இருந்த சகபக்தர்கள் தீட்சிதரை தட்டிக் கேட்டுள்ளனர். இதனையடுத்து லதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிதம்பரம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், தீட்சிதர் தர்சன் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, மிரட்டல், பெண் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தீட்சிதர் தர்சன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x