Published : 17 Nov 2019 06:54 PM
Last Updated : 17 Nov 2019 06:54 PM

திமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

மதுரை

கூட்டுறவு சங்கங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு கொண்டிருந்தபோது தி.மு.கவினர் கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகிகளாக பதவி ஏற்றனர். அதன் பின்னர் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைய தொடங்கின என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார்.

மதுரை உலக தமிழ் சங்கத்தில் மாவட்ட அளவிலான 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் 1541 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 63 லட்சத்து 81 ஆயிரத்து 711 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, “கூட்டுறவு சங்கங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு கொண்டிருந்தபோது தி.மு.கவினர் கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகிகளாக பதவி ஏற்றனர். அதன் பின்னர் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைய தொடங்கின.

ஜெயலலிதா ஆட்சியின்போது கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலம் சிறந்த நிர்வாகிகளை கொண்டு சங்கங்கள் இயங்கி வருகின்றன.

வெற்றிகரமாக 2-வது முறையும் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில்தான் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டன. தேசிய வங்கிகளுக்கு நிகராக கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன.

இதனால் நாட்டிலேயே தமிழக கூட்டுறவுத்துறைக்கு மட்டும் 27 விருதுகள் கிடைத்துள்ளன.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x