

மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி முதல்வர் ஜெயலலிதா, எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மாநில தலைமை தகவல் ஆணையர், தகவல் ஆணையர்கள் நியமனம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை. இணையதளத்திலும் வெளியிடவில்லை. இந்த 3 பேரின் நியமனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்துக்கு எதிரானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது ஆகும். இவர்கள் நியமனத்தில் எந்த சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை.
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி முதல்வர், எதிர்கட்சித் தலைவர், முதல்வரால் நியமிக்கப்பட்ட அமைச்சர் ஆகியோர் கொண்ட தேர்வுக் குழுதான், மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களை தேர்வு செய்து சிபாரிசு செய்ய வேண்டும். ஆனால், இக்குழு கூட்டம் நடந்த நாளில், சில மணி நேரத்துக்கு முன்புதான் எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதனால் எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதிலிருந்து முதல்வர் உத்தரவுப்படி இக்கூட்டத்தில் இருந்து விஜயகாந்தை விலக்கி வைத்தது தெரியவருகிறது.
மாநில தலைமை தகவல் ஆணையராகப் பதவியேற்றுள்ள ராமானுஜம், டிஜிபியாக இருந்து ஓய்வுபெற்றதும் அரசின் சிறப்பு ஆலோசகராக முதல்வரால் நியமிக்கப்பட்டார். தகவல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் நீதிபதி தட்சிணாமூர்த்தி, பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டாக இருந்தபோது முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரின் வருமான வரி வழக்கை விசாரித்தார். மற்றொரு தகவல் ஆணையரான முருகன், அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர். இவர்களது அரசியல் விசுவாசத்துக்காகத்தான் மேற்கண்ட பதவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இவர்கள் எந்த தகுதி அடிப்படையில் இப்பதவியில் நீடிக்கிறார்கள் என்று கோருவதுடன், அவர்கள் நியமனத்துக்கும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு 8 வாரத்தில் பதில் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா, எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த், கவர்னரின் செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.