

சிங்காநல்லூரை சேர்ந்தவர் நாகநாதன் மகள் ராஜேஸ்வரி என்ற அனுராதா(30). இவர், நீலாம்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 11-ம் தேதி, விமான நிலையத்தில் இருந்து நீலாம்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கோல்டுவின்ஸ் அருகே விபத்தில் சிக்கினார். இதில் பின்னால் வந்த லாரி ஏறியதில் ராஜேஸ்வரியின் கால்கள் நசுங்கின. இந்த சம்பவம் தொடர்பாக, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ராஜபாளையத்தை சேர்ந்த முருகன்(53) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோல்டுவின்ஸ் அருகே வைக்கப்பட்டு இருந்த அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதை கோவை மாநகர கிழக்குப்பிரிவு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மறுத்துள்ளனர். இதற்கிடையே, விபத்தில் படுகாயமடைந்த ராஜேஸ்வரி நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜேஸ்வரிக்கு முதல் இரண்டு நாட்கள் அடுத்தடுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நசுங்கிய கால்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இருப்பினும், ரத்த நாளம் துண்டிக்கப்பட்டு, அழுகத் தொடங்கியதால், ராஜேஸ்வரியின் இடதுகால் இருதினங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அப்போது மருத்துவ செலவுக்காக ரூ.5 லட்சம் நிதியையும் அவரது குடும்பத்தினரிடம் அவர் வழங்கினார்.
பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘ இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துக்கு காரணமான அதிமுக கொடிக் கம்பத்தை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கால் இழந்த பெண்ணுக்கு செயற்கை கால் பொருத்த வேண்டும் என்றால் அதற்கான செலவையும் திமுக ஏற்கும்,’’ என்றார்.