

சென்னை அயனாவரத்தில் ரூ.2000 கள்ள நோட்டை மாற்ற முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர். மொத்தம் 6 கள்ள ரூ.2000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக மூத்த நகர போலீஸ் அதிகாரி கூறும்போது, “ஓட்டேரியைச் சேர்ந்த ஏழுமலை என்ற நபர் அயனாவரம் மார்க்கெட்டில் உள்ள இனிப்புப் பலகாரக் கடையில் ரூ.2000 நோட்டைக் கொடுத்து இனிப்புகள் வாங்கியுள்ளார்.
கடைக்காரர் மீதித் தொகையை கொடுத்தவுடன் ஏழுமலை ஓட்டம்பிடித்துள்ளார். ஏன் ஓட வேண்டும் என்று கடைக்காரருக்குச் சந்தேகம் எழவே நோட்டைச் சரிபார்த்தால் அது கள்ள நோட்டு என்று தெரிந்துள்ளது.
கடைக்காரர் ஏழுமலையைத் துரத்திப் பிடித்தார், அதாவது ஏழுமலை ஆட்டோவில் ஏறித் தப்ப முயன்ற போது பிடிபட்டார். சமையல் தொழிலில் உள்ள ஏழுமலை அயனாவரம் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்” என்றார்.
இது தொடர்பாக அயனாவரம் எஸ்.அருணகிரிநாதர் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குத் தொடரப்பட்டது, மேலும் ஏழுமலையிடமிருந்து 6 கள்ள ரூ 2000 தாள்கள் கைப்பற்றப்பட்டன.
இவருக்கு இந்த நோட்டுகள் எப்படிக் கிடைத்தன என்றும் இவர் பின்னணியில் கள்ள நோட்டுக் கும்பல் உள்ளதா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.