

மதுரை
மதுரை அரசு மருத்துவமனையில் மொத்த தேவையில் தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. அதனால், போதிய சுகாதாரமில்லாமல் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோருக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிரந்தரமாக நீர் ஆதாரம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை அரசு மருத்துவ மனையில் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் என்று ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கான வாகன நிறுத்தும் இடம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போதுமானதாக இல்லை.
வார்டுகளில் 300-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள், குளியல் அறைகள் உள்ளன. மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பார்வை யாளர்களுக்கு கழிப்பறைகள் உள்ளன. மாணவர்கள் விடுதிகள், கேன்டீன்கள், டீ கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் மட்டுமின்றி மருத்துவமனையில் நடக்கும் அறுவை சிகிச்சைகள் மற்றும் மற்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது.
மருத்துவமனையில் கோரிப்பாளையம் பழைய மருத்துவக் கட்டிடப் பிரிவு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் அண்ணா நகர் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைப்பிரிவு உள்ளன.
பழைய மருத்துவமனை கட்டிடப் பிரிவுக்கு தினமும் 11 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. ஆனால், நான்கரை லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 50 ஆயிரம் லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.
அண்ணா பஸ்நிலையத்தில் உள்ள கட்டிடப்பிரிவுக்கு 4 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், லாரி மூலம் 1 லட்சம் லிட்டர் தண்ணீரும், குடிநீர் குழாய் மூலம் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த மருத்துவமனையில் 60 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.
போதிய தண்ணீர் இல் லாததால் வார்டுகளில் உள்ள கழிப்பறை, குளியல் அறை மற்றும் பொது கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுகிறது. அறுவை சிகிச்சைகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மருத்துவமனையில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லை. மாநகராட்சி குடிநீர் குழாய் வழியாகவும், லாரிகள் மூலமும் தினமும் மருத்துவமனை நிர்வாகம் தண்ணீரை பெறுகிறது. இதில், தாமதம் ஏற்படும்போது மருத்துவமனையின் ஒட்டுமொத்த செயல்பாடும் பாதிக்கப்படுகிறது. அதனால், மருத்துவமனைக்கு நிரந்தர நீர் ஆதாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம், தனி குழாய்கள் அமைத்து மருத்து வமனைக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது:
மருத்துவமனையில் உள்ள அனைத்து குடிநீர் கட்டமைப்பும் மோசம். மேல்நிலை குடிநீர் தொட்டிகள் மிக பழமையானது. குடிநீர் பராமரிப்புக்கும் குறைவான பணியாளர்களே உள்ளனர். மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. நோயாளிகள், பார்வையாளர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப குடிநீர் ஆதார கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.