Published : 17 Nov 2019 12:58 PM
Last Updated : 17 Nov 2019 12:58 PM

6 மணி நேரம் இடைவெளியின்றி பெய்த மழையால் தண்ணீரில் தத்தளித்த நெல்லை மாநகரம்: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது; மக்கள் மறியல் 

பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகர் மற்றும் திருமலை நகர் பகுதியில் மழை நீர் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்தது | படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரில் 6 மணிநேரம் இடைவிடாது பெய்த மழையால் குடியிருப்புகளையும், தெருக்களையும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் சிரமப்பட்டனர்.

திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப்பின் 2 மணிக்கு தொடங்கி காலை 8 மணிவரை இடைவிடாது பெய்த மிதமான மழையால், மாநகரில் தாழ்வான பகுதிகளிலும், சாலையோரங்களிலும் தண்ணீர் அதிகம் தேங்கியது. ஏற்கெனவே பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்காமல் சாலைகள் சேதமடைந்திருந்த நிலையில், 6 மணிநேரம் நீடித்த மழையில் இச் சாலைகளின் நிலைமை மேலும் மோசமானது. மாநகரில் பல இடங்களும் வெள்ளக்காடானது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.

போக்குவரத்து தடை

திருநெல்வேலி டவுன் காட்சிமண்டபம் பகுதி முழுக்க தண்ணீர் தேங்கியது. இதனால் டவுனிலிருந்து பேட்டைக்கு செல்லும் சாலையில் போக்கு வரத்து தடைபட்டது. இங்குள்ள தடிவீரன்கோயில் தெருவை சூழ்ந்த வெள்ளம், அருகே இருக்கும் கால்வாயில் அருவியாக பாய்ந்தது. திருநெல்வேலி கரையிருப்பு பகுதியில் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்பதால், அங்குள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வெளியேற முடியாமல் திணறினர். தண்ணீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் மறியல் கைவிடப்பட்டது. இதுபோல் தச்சநல்லூர் உலகம்மன்கோயில் அருகே மின்கம்பம் உடைந்தது. மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து மின் இணைப்பை துண்டி த்தனர்.

திருநெல்வேலி டவுன் மார்க்கெட் பகுதியில் முட்டளவுக்கு தண்ணீர் சூழ்ந்திருந்தது. டவுன் சந்திபிள்ளையார் கோவில்- பேட்டை சாலையில் வெள்ளம் கரைபுரண்டது. டவுனில் உள்ள ஜெயபிரகாஷ் தெருவினை இணைக்கும் பாலத்தை தாண்டி தண்ணீர் பாய்ந்தது. கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக அப்பகுதி வெள்ளக்காடானதாக மக்கள் தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியால் பாலத்தின் அருகே இருந்த குப்பைகளை அகற்றினர்.

வீடுகளுக்குள் தண்ணீர்

திருநெல்வேலி டவுனை சுற்றி கிராமங்களில் உள்ள குளங்களில் இருந்து வரக்கூடிய கால்வாய்கள் திருநெல்வேலி கால்வாயில் இணையும் பகுதிகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்புகளின் பிடியில் இருப்பதால், அப்பகுதிகள் நேற்று வெள்ளக்காடானது. பாளையங்கோட்டை மன காவலம் பிள்ளை நகர் மற்றும் திருமலை நகர் பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.

திருநெல்வேலி டவுன் பேட்டை சாலையில் உள்ள பகத்சிங் தெரு வினை இணைக்கும் பாலத்தின் மீதும், டவுன் சந்திபிள்ளையார் கோவில்- பேட்டை சாலையிலும் வெள்ளம் கரைபுரண்டது.

சேரன்மகாதேவி, பாளை.யில் 100 மி.மீ. மழை

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவி, பாளையங்கோட்டையில் தலா 100 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு: திருநெல்வேலி- 83, ராதாபுரம்- 53, மணிமுத்தாறு- 47, பாபநாசம்- 43, சிவகிரி- 40, சேர்வலாறு- 29, அம்பாசமுத்திரம்- 28, கொடுமுடியாறு அணை- 25, கருப்பாநதி அணை- 15, அடவிநயினார் கோவில் அணை- 6, நாங்குநேரி- 5.50, தென்காசி- 3, கடனாநதி அணை, சங்கரன்கோவிலில் தலா 1 மி.மீட்டர் மழை பதிவானது.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கான மொத்த நீர் வரத்து விநாடிக்கு 909 கனஅடியாக இருந்தது. 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர் வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருந்ததால், நீர்மட்டம் அதிகரிக்கவில்லை. பாபநாசம் அணை நீர்மட்டம் 128.05 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 129.07 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,194 கனஅடி நீர் வந்தது. 35 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 65.40 அடியாக இருந்தது. குண்டாறு, அடவிநயினார் கோவில் அணைகள் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளன. மற்ற அணைகளில் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை.

குற்றாலத்தில் வெள்ளம்

குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், இந்த அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மாலையில் வெள்ளம் குறைந்த பின்னர் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x