

தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் அரளி மலர் சாகுபடி, சிறு, குறு விவசாயிகளுக்கு நிலையான வருமானம் வழங்கி வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் முத்தம்பட்டி, கோடுஅள்ளி, அத்தி மரத்தூர், தொப்பூர்,ஜருகு, பாளை யம்புதூர், சாமிசெட்டிப்பட்டி, வெள்ளோலை, மொரப்பூர், கடத்தூர், சிந்தல்பாடி, பொம்மிடி, கொண்டகர அள்ளி, வத்தல்மலை, கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்ட அள்ளி, வெள்ளிச்சந்தை, மகேந்திரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறு, குறு விவசாயிகள் பலர் அரளி மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த பட்சமாக 5 சென்ட் பரப்பில் தொடங்கி 1 ஏக்கர் வரையில் விவசாயிகள் அரளி பயிரை நடவு செய்துள்ளனர். அரளிச் செடிகள் விவசாயிகளுக்கு கறவை மாடுகளைப் போல தொடர்ந்து வருமானம் அளித்து வரு கிறது. அதேநேரம், அரளி விவசாயி கள் படும் வேதனைகளும் அதிகம்.
இதுபற்றி, முத்தம்பட்டி அடுத்த கோடுஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அத்திமரத்தூரைச் சேர்ந்த விவசாயி மணி கூறியது:
அரளிச் செடி நடவு செய்தால் வீட்டில் கறவை மாடுகள் வைத்திருப்பதற்கு சமம். தினமும் கைக்கு காசு வந்து சேரும். ஆனால், கடுமையாக உழைக்க வேண்டி யுள்ளது. விவசாய பணிகளுக்கு தற்போது ஆட்கள் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது.
வயலில் உலவும் ஆபத்துகள்
சூழலுக்கு ஏற்பவும், ஆட்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவும் பூ பறிக்கும் பணியில் இரவு நேரங்களிலும் ஈடுபடுகிறோம். நெற்றியில் கட்டிக் கொள்ளும் டார்ச் லைட் வெளிச்சத்தை பயன்படுத்தி, வளர்ந்த மொக்குகளை பறிப்போம். வெளிச்சமும், பறிப்பவர்களின் கவனமும் செடியின் உச்சிப் பகுதியில் இருக்கும். அப்போது காலுக்கு கீழே பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் அச்சுறுத்தலும் இருக்கும். இந்த ஆபத்துகளுக்கு மத்தியில் தான் தினமும் பூக்களை பறிக்கிறோம்.
கிலோ ரூ.10 என்ற நிலைக்கு விலை சரியும்போது அரளி விவசாயிகள் வேதனையில் தவிப்போம். ஒருசில நேரங்களில் கிலோ ரூ.250 வரை கூட விற்பனையாகும். சராசரியாக ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனையாகும். சந்தைக்கு மலர் வரத்தின் நிலவரத்தை பொறுத்தே விலை நிர்ணயமும் அமைகிறது.
கூட்டுறவு கொள்முதல் மையம்
தனியார் வியாபாரிகளிடம் விற்கும்போது இடைத்தரகு உள்ளிட்ட சேதாரங்கள் அனைத்தும் விவசாயிகளின் முதுகில் இறக்கி வைக்கப்பட்டு விடுகிறது. அரளி மலர் சாகுபடி அதிகம் உள்ள மாவட்டங்களில் அரசு சார்பில் கூட்டுறவு மலர் கொள்முதல் மையம் அமைத்து நிர்வகிக்க வேண்டும். இதன்மூலம், விவசாயிகளுக்கு சற்றே கூடுதலான வருமானம் கிடைக்கும். அதேபோல, நிலையான விலை கிடைக்கவும் அரசு வழி செய்தால் பேருதவியாக இருக்கும்.
மலர்ப் பயிர்கள் அனைத்தும் தோட்டக்கலை பயிர் வகைகளில் சேர்க் கப்பட்டுள்ளதால் இவ்வகை பயிர் சாகுபடிக்கு வங்கிகளில் வேளாண் கடன்கள் கிடைப்பதில்லை. இதுகுறித்தும் அரசு பரிசீலனை செய்து மலர் சாகுபடிக்கும் வங்கிக் கடன்கள் வழங்கினால் மலர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் பயன்பெறுவர்.
இவ்வாறு கூறினார்.