

சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு கொடுத் துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆயத்தப் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதனிடையே, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. அதிமுகவில் நேற்று முன்தினம் (16-ம் தேதி) மற்றும் நேற்றும் (17-ம் தேதி) விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம், எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர்கள் எம்.கே.செல்வராஜ், என்.பி.எஸ்.மணி ஆகியோர் கொண்ட குழுவினர் சேலம் மாநகராட்சி மேயர் மற்றும் வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.
மேயர் பதவிக்கு போட்டியிட முன்னாள் மேயர்கள் சவுண்டப்பன், சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி, முன்னாள் சேலம் எம்பி பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ எம்.கே.செல்வராஜ், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட சரவணன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.சேகரன், மாநகர் மாவட்ட செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான வெங்கடாசலத்தின் மகள் பேபி மற்றும் அதிமுக பகுதிச் செயலாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
இதேபோல, சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அதிமுக சேலம் புறநகர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, அதிமுக அமைப்புச் செயலாளர்கள் எம்எல்ஏ செம்மலை, வடிவேல், புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கொண்ட குழுவினர் விருப்ப மனுக்களை பெற்றனர்.
புறநகர் மாவட்ட அதிமுகவில் ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூர் ஆகிய நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள பதவிகளில் போட்டியிடவும் அதிமுகவில் நூற்றுக்கணக்கானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.