

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அர்ச்சனை செய்ய வந்த பெண் செவிலியர் ஒருவரை கோயில் தீட்சிதர் கன்னத்தில் அறைந்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து பெண் செவிலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிதம்பரம் வ.வு.சி தெருவைச் சேர்ந்த செல்வ கணபதி என்பவரின் மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமைச் செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.
லதா சனிக்கிழமை இரவு நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு அர்ச்சனை செய்ய வந்தார். முக்குருணி விநாயகர் சன்னிதியில் தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு குருக்களை கேட்டுக் கொண்டார்.
ஆனால் அர்ச்சனை செய்யாமல், வெறும் தேங்காயை மட்டும் தீட்சிதர் உடைத்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து லதா, ஏன் அர்ச்சனை செய்யவில்லை என்று கேட்ட போது அவரை தீட்சிதர் தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆத்திரத்தில் லதாவின் கன்னத்தில் அறைந்ததால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
அருகில் இருந்த சகபக்தர்கள் தீட்சிதரை தட்டிக் கேட்டுள்ளனர். இதனையடுத்து லதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லதாவின் கணவர் தனியார் தொலைக்காட்சிக்கு இது பற்றி கூறும்போது, “என் பையனின் பிறந்தநாள், அதற்காக அர்ச்சனை செய்ய கோயிலுக்கு சென்றார். அர்ச்சனைப் பண்ண வந்தப்ப இந்த சம்பவம் நடந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கணும், ஏனென்றால் நாங்கள்ல்லாம் தினமும் கோயிலுக்கு போறவங்க. இந்தத் தப்பு இன்னொரு முறை நடக்கக் கூடாது.
கோயிலுக்கு மன நிம்மதிகாக வர்றோம், சாமி கும்பிட வர்றோம், அடி வாங்க வரல்ல. சம்பவத்தை அடுத்து போலீஸார் கோயிலுக்கு வந்து விசாரணை நடத்தினர்.