பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளது: ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி வாசுகி குற்றச்சாட்டு

வாசுகி
வாசுகி
Updated on
1 min read

சேலம்

தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவருமான உ.வாசுகி குற்றம்சாட்டினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ஏழு வயது சிறுமியை மர்ம நபர்கள் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூர சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். சிறுமியை நேற்று உ.வாசுகி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளது. சேலம் ஓமலூரில் ஏழு வயதுடைய 2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் ரீதியான சம்பவம் நடந்துள்ளது. இது கண்டனத்துக்குரியது. தொடர்புடைய குற்றவாளிகளை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரு கின்றன. இதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் மற்றும் பெண்கள் அமைப்புகள் இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும்.

தமிழக அரசு பெண்கள் மீதான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழக சட்டப்பேரவையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பிரச்சினைகளை களைய சிறப்பு அமர்வினை நடத்த வேண்டும். வரும் காலத்தில் மகளிர் ஆணையத்தின் மூலம் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது.

வரும் 25-ம் தேதி சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். ஓமலூர் சிறுமிக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in